திருமங்கையாழ்வார்:07
பகுதி-01
"பொங்கு புகழ் மங்கையர்கோன் ஈந்த மறைஆயிரம் அனைத்தும் தங்கும் மனம்" என இராமானுஜர் திருமங்கையாழ்வாரை புகழ்ந்து பாடுகிறார். 1084 பாசுரங்களை இவர் பாடியுள்ளார். இவர் கி.பி 9ம் நூற்றாண்டில் சோழநாட்டில் திருவாழிநாட்டில் திருக்குறையாலூர் எனும் ஊரிலுள்ள ஆழிநாடன் என்ற சோழமன்னனின் முதன்மை தளபதிக்கும் அவர் மனைவி வல்லித்திருவிற்கும் மகனாய் தோன்றியவர் இவ்வாழ்வார்.
திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள் நீலன் என்னும் திருநாமம் சூட்டினார்.இவர் தந்தை இறந்தபின் சோழனுக்காக பல போர்களில் கலந்து வெற்றியை மன்னர் முன் சமர்ப்பித்தார், எனவே சோழன் இவருக்கு "பரகாலன்" எனும் பட்டமளித்து நீலனின் வீரத்தைப் போற்றி, அவரைத் திருவாலியின் குறுநில மன்னன் ஆக்கினார்.
குமுதவல்லியுடன் காதல்:
திருவெள்ளகுலம் எனும் நகரிலுள்ள பொய்கையில் "திருமாமகள்" எனும் பெயருடைய பெண்ணொருத்தி தாமரைமலரை கொய்துகொண்டிருந்தாள், அச்சமயம் அங்குவந்த வைஷ்ணவர் ஒருவர், அதனைகண்டு "பெண்ணே நீ யார்?" என வினவ, நான் ஒரு தேவமங்கை "சுமங்களை"என்பது என் பெயர், ஒருமுறை நான் என் தோழிகளுடன் சென்று குரூபியாய் இருந்த சித்தர் ஒருரை கேலி செய்தேன்.அச்சமயம் ஞானநூல்களை அத்யஞனம் செய்துகொண்டிருந்த கபிலாச்சாரியார் எனை கண்டு, அச்சித்தரின் மகிமையறியாத பேதை நீ, இனி மனிதஉருவெடுத்து மண்ணில் பிறப்பாய்! அதுமின்றி நீ ஒரு மிலேச்சனுக்கு மனைவியாவாய்! என கடுமையாய் சபித்தார். நான் காலில் விழுந்து மன்னிப்புகோரவே, மனமிறங்கி கொடுத்த சாபம் திருப்ப இயலாது, எனவே நீ திருவாழி நாட்டு மன்னனை திருத்தி வைணவராக்கினால் அவர்மூலம் நீ நற்கதியடைவாய்! இல்லையெனில் நீ நிர்மூலமாவாய்,அவர் சாதாரணமானவர் அல்லர், விஷ்ணுவின் ஆயுதமான சார்ங்கத்தின் அம்சமானவர்.அவரை மணந்து ஹரிபக்தனாக்கி சுகப்படுவாயாக, என அருளிச்சென்றார். என தன் கதையை கூற, அவள் கதையை கேட்ட அந்த வைஷ்ணவர், குழந்தைப்பேறு இல்லா தனக்கு பகவான் அழைத்த கொடை என அவளை அழைத்துச்சென்றார். அக்குழந்தையின் கதையினை தன் இல்லாளிடம் கூடி, "குமுதவல்லி" எனும் திருநாமமிட்டு வளர்த்தனர். அக்கன்னியும் பெதும்பை பருவமடைந்து, பக்தியால் ஊர்மெச்ச வாழ்ந்து வந்தாள், குமுதவல்லியின் புகழைகண்டு அவளை மணம் செய்ய திருநாங்கூரிலுள்ள அந்த வைஷ்ணவரின் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.
ஆனால் குமுதவல்லியாரோ, ‘திருவிலச்சினையும், திருநாமமும் உள்ள வைணவனுக்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்’ என்று மறுத்துரைத்தாள்.
மேலும் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மொழிந்தாள்.
இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்.
வைஷ்ணவரான நீலர்:
நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார்.
இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்சசம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நீலர்தான்.
அதன்பின் ஓர் நன்னாளிலே குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.
தம் மணவாட்டிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தினமும் ஆயிரம் பாகவதர்களை அழைத்து, அவர்களின் தேவையறிந்து பொருளுதவியும், அண்ணமும் அளித்துவந்தார். குன்றகுன்ற குன்றும் மாளும் என்தற்கேற்ப, அவரது செல்வமும் தீரஆரம்பித்தது, எனவே சோழமன்னருக்கு அளிக்கவேண்ட கப்பம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது, நீலனின் வீரத்தை நன்கு அறிந்த சோழமன்னன், நீலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்பதால், நீலனை தந்திரமாக அழைத்து ஒரு கோவிலில் சிறை வைத்தான். அங்கே உணவுகொள்ள விருப்பமில்லாது மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நீலனின் கனவில் அத்திகிரி அருளாளனான காஞ்சிப் பெருமாள் வரதராஜர் தோன்றினார்.
நீலரை காஞ்சிக்கு வருமாறு சொன்னார். வந்தால், அவர் பட்டிருக்கும் கடனைத் தீர்ப்பதாக அறிவித்தார்.
வரதராஜ பெருமாளின் ஆணையை அரசுக்குத் தெரிவித்தார் நீலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்பதை நன்கு உணர்ந்த அரசன், ஒரு சிறு குழுவை அவரோடு காஞ்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கே, மீண்டும் நீலன் கனவில் தோன்றிய காஞ்சி வரதன், புதையல் இருக்கும் இடத்தை காண்பித்துக் கொடுத்தார்.
அதன்படி, வேகவதி ஆற்றின் கரையில் தோண்டினார் அவர். பெரும் புதையலைக் கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்தினார். மீதம் இருந்ததை அன்னதானத்துக்கு எடுத்து வைத்தார். அடுத்து, திருமங்கை நாட்டின் விளைச்சலில், பேரரசுக்குச் சேர வேண்டிய நெல்லினைக் கேட்டனர், சோழ மன்னனின் அதிகாரிகள். நீலரோ, காஞ்சிப் பேரருளாளனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டபடியே, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார்.
என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல் துகள் அனைத்தும் நெல்மணிகளாயின! நீலனின் பெருமையை, தெய்வம் அவருக்குத் துணை நின்றதை அறிந்த அரசன், தன் தவறுக்கு வருந்தினான். அவர் திருமங்கை நாட்டை சுதந்திரமாக ஆள்வதற்கு வழிவிட்டான்.
எம்பெருமான் திருமாலுக்காக திருமங்கையாழ்வார் வழிப்பறி செய்ததையும், அவர்கால சமூக அமைப்பையும்,அவரது சிறப்பான பாசுரங்களையும் அடுத்தடுத்த பகுதியில் காண்போம்.

No comments:
Post a Comment