திருமங்கையாழ்வார் பகுதி-02

 திருமங்கையாழ்வார்


பகுதி-02


பரகாலரின் வழிப்பறி:


சோழனின் கடனை அடைத்தபின், அடியாருக்கு தினமும் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் செய்து வந்ததனால் கையில் இருந்த இருப்பு மீண்டும் கரைய ஆரம்பித்தது. ஆழ்வாரின் மனது கலங்க ஆரம்பித்தது. அப்போதுதான் அந்த விபரீதஎண்ணம் மனதில் உதித்தது, வழிப்பறி செய்து அதில் கிடைக்கும் பணத்தினை கொண்டு அடியார்களின் பசியாற்றுவோம் என எண்ணினார். நீர்மேல்நடப்பான், நிழல்மேல்ஒதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரையும் துணைக்கு வைத்து களவாங்க ஆரம்பித்தார். பாதசாரிகளை தாக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்து வழக்கம்போல் பாகவதர்களுக்கு அன்னமிட்டு உபசரித்து மகிழ்ந்தார்.

நாள்தோறும் இவ்வாறே நடக்க, தான் செய்துவருவது தவறு என்பதே அவர் அறியாமல் வழமையாக தொடர்ந்தார். பரம்பொருளான திருமால் அவரை சோதிக்க எண்ணி ஒரு முறை பெருமாள் பிராட்டியுடன் மணக்கோலத்தில் வந்தார்.  ஆழ்வார் தன் படையினருடன் அந்தத் தம்பதிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டார். ஆனால் கால் அறுகாழியை(மெட்டி) மட்டும் பெருமாள் கழட்டவில்லை. ஆழ்வாரும் அறுகாழியைக் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்றார்.


ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுத்தார். “எம் கலியனோ?”  என்று பெருமாள் ஆழ்வரைப் பார்த்து வியந்தார். பின்பு தாம் கொள்ளைகொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, “நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம், சொல்?” என்று கேட்டார். பெருமாள் ஆழ்வாரை அருகே அழைத்து, அவர் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை,  பரகாலர் கொள்ளையடித்து, அதன்பின் உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு  “திருவேடுபறி” என்று பெயர், இன்றும் பல திவ்ய தேசங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் இது மிகப்பிரசித்தம்.

பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)

திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)

திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)

திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)

சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)

பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)

ஆக இவர் மொத்தம் ஆறு திவ்யப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இவர் முழுமையாக 1000 பாடல்களுக்கு மேல் பாசுரங்கள் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவர் இயற்றிய பாசுரங்களின் சிறப்பான பகுதிகளை நாளை காண்போம். அவற்றில் ஒரு சிறு எடுத்துக்காட்டு,


ஒன்றிலிருந்து ஏழுவரை படிப்படியாய் ஏற்றி இறக்கி இயற்றப்படும் செய்யுள் "ஏழு கூற்றிருக்கை" எனப்படும். இதனை தேர்பந்தம் எனப்படும் சித்திரக்கவியாகவும் அமைத்து காட்டப்படும்,


இதனை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார், நாளை அவரது பதிகங்களின் சிறப்புகளை காண்போம்.




No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...