சங்க இலக்கியத்தில் திருமால்

 ஆழ்வார் காலம் முன்னுள்ள வைணவ மதம்:


ஆழ்வார்கள் பற்றி அறியும் முன், அவர்கள் காலத்திற்கு முன் நிலைபெற்ற வைணவ மதத்தினை பற்றி காண்போம். வைணவ மதத்தின் வரலாற்றினை

 1.தமிழகம் முழுவதும் உள்ள வைணவம்

 2.இந்தியா முழுவதும் வழக்கில் உள்ள வைணவம்

என இரு பெரும் பிரிவுகளாய் காணலாம், வட இந்திய இதிகாசங்கள், புராணங்கள் தவிர்த்து நாம் நம் தமிழ்மண்ணில் நிலைபெற்று விளங்கிய வைணவம் பற்றி அறிவதே இத்தொடரின் நோக்கம்.

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”


என்று ஐந்திணையில் உள்ள கடவுளரை குறித்து தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது. மாயோனின் பெயர்காரணத்தை ஆராய்ந்தோமானால்,

மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரி யோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது உயரிய அடையாளம்.


சங்க இலக்கியத்தில் திருமால்:


அகநானூறு, நற்றிணை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் கிருஷ்ணர், பலராமர் இருவரையும் தனிப்பெரும் கடவுளராய் காட்டப்பட்டுள்ளனர். 

 முல்லைப்பாட்டில் "மால்" என்ற சொல்லும், மதுரைக்காஞ்சியில் "மாயோன்"  என்ற சொல்லும் பயின்று  வருகிறது,

"காந்தளஞ் சிலம்பில் நீடுகலைக் களிறுபடிதந்  தாங்குப் பாம்பணைப்  பள்ளி  அமர்ந்தோன்"

 என பாம்பின்மேலே பள்ளிக்கொண்ட பெருமாள் எனத்  திருமாலைப் போற்றுகிறது பெரும்பாணாற்றுப் படை.

 

 "வேத முதல்வன் என்ப

தீதுஅற விளங்கிய  திகிரி யோனே"


என்கிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

பின்னாட்களில் முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்


இவ்வாறு சங்ககாலத்திற்கு முன்தோன்றிய மாயோன் வழிபாடு, சங்கம்மருவிய காலம் எனப்படும் சிலப்பதிகாரத்தில் அதன் நீட்சி அதிகம் காணப்படுகிறது. இக்காலமே ஆழ்வார்கள் தோன்றுவதற்கு முந்தைய காலநிலை எனலாம்.


பிற்சங்ககாலத்தில் திருமால்:


திருமாலின் அவதாரங்கள் பிற்சங்ககாலம் எனப்படும் பரிபாடலில் அதிகம் வருகிறது. பரிபாடல் காலத்தினை அறிஞர்கள் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இக்காலகட்டத்தில் விஷ்ணுவின் தசாவதார கதைகள் இலக்கியத்தில் முழுவதுமாய் எடுத்தாளப்பட்டது.


உதாரணமாய் பரிபாடலில் திருமாலின் வராக அவதாரத்தினை,


"கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

ஊழி யாவரும் உணரா"

என்றும் கூர்ம அவதாரத்தை

"திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்

திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி

மகர மறிகடல் வைத்து நிறுத்துப்

புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்

அமுது கடைய இருவயின் நாண்ஆகி

மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க

உகாஅ வலியின் ஒருதோழம் காலம்

அறாஅது அணிந்தாரும் தாம்"


என கூறுவதிலிருந்து அறியலாம்.

இதுதவிர அழகர்கோவில் திருமாலை மக்கள் வழிபாடு செய்ததை பரிபாடல் எடுத்துகாட்டுகிறது.


கல்வெட்டுகளில் மகாபாரதம் குறித்த குறிப்புகள்:


இலக்கியங்கள் தவிர்த்து கல்வெட்டு ரீதியாய் தமிழகத்தில் காலத்தால் முற்ப்பட்ட ஆவணங்கள் மகாபாரதத்திற்கு இல்லை, எனினும் கர்நாடக மாநிலம் ஐய்கொளேவிலுள்ள கல்வெட்டு ஒன்று மகாபாரதம் நடந்த காலம் என ஒரு தகவலை தருகிறது.


சாளுக்கியத்தலைநர்

வாதாபி ( பதாமி)யிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஐகோளே என்னும் நகரத்தில் அமைந்த மேகுட்டி மலையில் உள்ள கோவிலின் கிழக்குச் சுவற்றில் இக்கல்வெட்டு உள்ளது.

இது நேமிநாதருக்கு எழுப்பப்பட்ட ஒரு ஜைனக்கோவிலாகும்


பல வரலாற்றுத்தரவுகளை ஒரு சரித்திரநூல் போல் இக்கல்வெட்டுத் தருகிறது.


சாளுக்கிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் அரசவைக் கவிஞரான இரவிகீர்த்தி என்பவர் இக்கோவிலை எழுப்புகிறார்.


19 வரிகொண்ட கல்வெட்டு. பழைய தெலுங்கு - கன்னட எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

.


சாளுக்கிய அரசர்களின் வம்சம். இரண்டாம் புலிகேசியின் கீர்த்தி மற்றும் பெருமை.

தனக்கு எதிராக சதி செய்த தன் சிற்றப்பன் மங்களேசனை கொன்று புலிகேசி ஆட்சிக்கு வந்தது. ஹர்சவர்த்தணரை வென்றது. பல்லவர்களை வென்றது. சேர சோழ பாண்டியர்களை காத்தது. போன்ற தரவுகள் இதில் உள்ளன.


கல்வெட்டுகளில் காணப்படும் வருடத்தை கணிக்கும் ஒரு மிக முக்கிய வருடக்கணிப்பு சகம் என்பதாகும். கல்வெட்டில் வரும் சகவருடத்துடன் 78 ஐ கூட்டினால் கிடைப்பது பொதுயுகம்.


ஐகோள் கல்வெட்டில் சகவருடம் 556 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக குறிப்பு உள்ளது.


ஆகையால்..

  556 + 78 = கி.பி.634.


கி.பி. 634 ம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.


சகவருடம் குறிப்பிடப்படும் முதல் கல்வெட்டு ஐகோளே கல்வெட்டே ஆகும்.


மேலும் ஒரு அவசியத்தகவலாக மகாபாரதப் போர் நடைபெற்ற காலமும், அதன் மூலம் கலிவருடம் என்னும் ஒரு ஆண்டு வரையறை செய்யவும் இக்கல்வெட்டுத் தரவுகள் உதவி புரிகின்றன.


கலிகாலம் தோன்றி மகாபாரதப்போர் நடந்து 3735 ஆண்டுகள் கடந்து, சகவருடம் 556 ஆண்டுகள் கடந்து இக்கோவில் எழுப்பப்படுகிறது.


சகவருடம் 556 என்றால் ( 556 + 78) கி.பி. 634.


கி.பி.634 என்பது பாரதப்போர் நடந்த கலியாண்டு 3735 ஆண்டுகள் கடந்து.


ஆகையால் 

கலி = 3735 - 634 = 3101.


ஆக.. கல்வெட்டுகளில் காணப்படும் கலி வருடத்திலிருந்து 3101 ஐ கழித்தால் கிடைப்பது பொதுயுகம்.


மேலும் ஒரு முடிவுக்கு வரலாம் இன்றிலிருந்து சரியாக 

5120 ( 3101 + 2019) ஆண்டுகளுக்கு முன் பாரதப்போர் நடைபெற்றுள்ளது.


அதாவது..

கலியாண்டு 5122க்கு சமமான ஆண்டு கி.பி.2021


இக்கல்வெட்டு விபரங்கள் எபிகிராபி இண்டிகா 6 ம் தொகுதி எண் 1 ல் காணலாம்.


முனைவர் க.சங்கரநாரயணன் அவர்களின் Sarasvatam இணையப்பக்கத்தில் தெளிவான தமிழ் மொழிப்பெயர்ப்புடன் காணலாம்..


கல்வெட்டுதரும் செய்திகளின் சுருக்கத் தொகுப்பு...

--------------------------------------

ஜினேந்திரர் வெல்கிறார். அவருடைய ஞானமாகிய கடலில் எல்லா உலகமும் தீவுகளைப்போல் இருக்கின்றன.


சாளுக்கியர்களின் குலமாகிய பெருங்கடல் வெல்கிறது. ஸத்யாச்ரயன் வெகுகாலம் வெல்கிறான்.


பூமிக்குத் தலைவன் என்னும் பொருளில் ப்ரூத்வி வல்லபன் என்னும் பெயருள்ள அரசபரம்பரையில் பல அரசர்கள் கடந்தப் பிறகு  ஜயஸிம்ஹ வல்லபன் சாளுக்ய அரசன் ஆனான். அவனுடைய மகன் ரணராகன். அவனுடைய மன் பொலகேசி ( முதலாம் புலிகேசி)


சந்திரனையொத்த தனது ஒளியினால் வாதாபி என்னும் மணமகளுக்கு கணவனாக திகழ்ந்தான்.


அவனுக்குப்பிறகு கீர்த்திவர்மன். பிறகு அவனது தம்பி மங்களேசன்.


அவனது தமையனின் மகனும் சீர்மை கொண்டவனுமான பொலகேசியை ( இரண்டாம் புலிகேசி) வீட்டுச்சிறையில் சிற்றப்பனான அவனே இருத்தி வைக்க முற்பட்டான்.


புலிகேசி எழுச்சிபெற்றப்போது மங்களேசன் தனது மகனுக்காக அரசை பெற முயற்சி செய்யும்போது தன்னுடைய உயிரை இழக்க நேர்ந்தது.


புலிகேசி, ஹர்சவர்த்தணரை வென்றான். மகாராஷ்டிரம், கோசலம், கலிங்கம் முதலியவற்றையும் வென்றான்.


பல்லவர்களின் தலைவனை காஞ்சி கோட்டையின் மதில்களுக்குள் ஒளிந்தவனாக ஆக்கினான்.


சோழர்களின் காவிரி நீர், புலிகேசியின் யானைகளால் ஒரு அணைபோல் தடுக்கப்பட்டதால், காவிரி கடலோடு கலக்கமுடியாமல் போயிற்று.


சோழ சேர பாண்டியர்களின் செழுமைக்கும், பல்லவர்களின் படையாகிய பனிக்கும் கதிரவன் ஆனான்.


மகாபாரதபோர் நிகழ்ந்து 3735 ஆண்டுகளுக்குப்பிறகு கலி காலம் தோன்றி சகவருடம் 556 ஆண்டுகள் கடந்தப்பிறகு ஸத்யாச்ரயன் அருளைப்பெற்ற இரவிகீர்த்தி என்பவரால் ஜினேந்ரருக்கு மலையை ஒத்தத் தளி எடுக்கப்பட்டது.



சங்ககாலம் தொடங்கி கி.பி 6ம் நூற்றாண்டு வரையிலும் செழித்த வைணவம்,அதன்பின் பாரதமெங்கும் கோலோச்சிய புறச்சமயங்களின் அலைகளில்  சிறிது தொய்வு ஏற்பட ஒருபுறம் இம்மதங்களால் பாதிப்படைந்த மற்றொரு மதமான சைவமும் கிளர்ந்தெழ, வைணவமும் ஆழ்வார்கள் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றது.இவர்களால் எழுச்சி பெற்றது மதம் மட்டுமல்ல. நம் தமிழும்தான். வைணவத்தை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார் என கூறுவர். 


பின்பழகியபெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பரை கதைகளின்படி கொண்டால் ஆழ்வார்கள்  துவாரகாயுகத்திலும், கலியுகத்திலும் அவதாரம் மேற்கொண்டதாய் கூறுகிறது. ஆனால் இந்நூலுக்கு காலத்தால் முற்ப்பட்ட "திவ்யசூரி சரிதை"யில் ஆழ்வார்கள் காட்டப்படாமையால் ஆய்வாளர்கள் இக்கருத்துகளை ஏற்ப்பதில்லை. வரும் பகுதிகளில் ஆழ்வார்களின் சரியான காலநிலை குறித்தும்  தமிழும் மதமும் வளர்த்த அச்சான்றோர்கள் வரலாற்றினையும் அடுத்து காண்போம்.








மகாபாரத கல்வெட்டு



No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...