பேயாழ்வார்:03

 பேயாழ்வார்:03


 திருமாலிடம் ஆழ்ந்த அன்புகொண்டு இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பித்துபிடித்து பேய்போலே உலாவினார் பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து சிரிப்பார், குதித்து ஆடிப்பாடுவார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர். தொண்டைநாட்டில் உள்ள இன்றைய சென்னை நகரின் முக்கிய பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள மயிலாப்பூர் என இன்று அழைக்கப்படும் திருமயிலையில் ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் இவர் தோன்றிய நாளாகும் இவர் திருமால் ஏந்திய வாள் படையின் அம்சமாய் கருதுவர். பேயாரின் மனம் இளம்பிராயத்திலேயே கற்கவேண்டிய கல்விச்செல்வம் அனைத்தும் வெகுவிரைவில் கற்றுதேர்ந்தார். இருப்பினும் அவர்மனம் அதனையும் தாண்டி திருமாலின் திருவடியையே நாடியது.தனிமையில் எம்பெருமான் திருமாலின் நாமத்தையே கண்ணீர்மல்க உருகி பாடிக்கொண்டே இருப்பார். இக்காட்சியை காண்போருக்கு இச்செயல், செந்தாமரை மலரின் தேனை அதீதமாய் குடித்து அம்மலரிலேயே மயங்கிகிடக்கும் வண்டினை போலவே காட்சியளித்தது. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சுதானே! வெளியுலகத்தை மறந்து திருமாலை போற்றினாலும், சுற்றத்தார் கண்களுக்கு இவரது தோற்றம் அச்சம் தருவதாகவும், பரிதாபமாகவும் தோன்றியது.


திருக்கோவலூரில் முதலாழ்வார்கள் மூவரையும் இணைத்து திருவிளையாடல் நிகழ்த்திய எம்பெருமானை எண்ணி முதலிருவரும், மனமுருகி அந்தாதி பாடல் பாடியது போலவே இவரும் 100 வெண்பாக்கள் பாடினார் இது மூன்றாம் திருவந்தாதி எனப்படும். இத்திருநூல் "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்"எனத் தொடங்கி, "சார்வு நமக்கு என்றும்" எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது.


பேயாழ்வரின் பதிகங்கள்:


இவர் சிறந்த கற்பனை வளம்மும், கவிபாடும் திறனும் மிக்கவர், உதாரணமாய், 

திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தினை கண்டு கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.


"ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்

ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத்

திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்

பகரும் மதி என்றும் பார்த்து"


பொய்கையாழ்வார் கூற்றுப்படி இவரும், "அரியும் ஹரனும் ஒருவரே" என்கிறார்.


"தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்

திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து"


தான் சென்ற வைணவத்தலங்களை கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார். பொய்கையாழ்வாரை போலவே இவரும் "விண்ணகரம்" எனும் ஊரினை பாடுகிறார். இது கும்பகோணம் பகுதி விண்ணகரமான, உப்பிலியப்பன் கோவில் என்று கூறுவர், சிலர் இது காஞ்சியை சேர்ந்த''பரமேஸ்வர விண்ணகரம்" என்பர்.


"விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு"


திருமால் கருப்போ, பச்சையோ, சிவப்போ, வெண்மையோ? திருமகளை தவிர எவரும் அறியோர்! என திருமாலின் வண்ணத்தினை விவரிக்க இயலாது திகைக்கிறார் இந்த பேயாழ்வார்.



"நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,

இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய

நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,

பூமங்கை கேள்வன் பொலிவு"



No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...