ஆண்டாள்: பகுதி-02
"குன்றாடு கொழுமுகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல்
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்றூடு தென்றலுமாம் மதிள் அரங்கம் என்பதுவே"
குவளைமலர், மயில், கடல், மேகம் போன்றவற்றில் உறைந்திருக்கும் நீலநிறத்தினை உடையவர்,
(இந்த வருணனையை கொஞ்சம் பூசினாப்போல எழுதியதே, அலைபாயுதே திரைப்படத்தில் வரும் பச்சை நிறமே பாடல், அதில் ஒவ்வொரு வண்ணத்தை பற்றி கூறுகையில், நீலநிறம் வரும் பகுதியில் இப்பாடலை இன்றைக்கு ஏற்றவாறு மாற்றி கையாண்டிருப்பார் வைரமுத்து அவர்கள்,
"அலையில்லாத ஆழி வண்ணம்,
முகிலில்லாத வானின் வண்ணம்,
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்,
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்,
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்,
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்!
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்")
அவ்வூர்களிலுள்ள குன்றின் வழியே (அநேகமாய் பொன்மலை, திருவெறும்பூர் உறையூர் சோழப்பாறையாய் இருக்கும்)சோழையினுள்ளே நுழைந்து, மெல்லிடைப்பெண்களின் மார்பை தொட்டு உலாவி மன்றத்தில் ஆடும் தென்றலும் மதில்களும் கொண்டது திருவரங்கம்,
இவ்வாறு தான் புகழ்ந்து பாசுரம் இயற்றிய எம்பெருமான் திருமாலையே தம்மகள் விருப்பத்தோடு தம் கணவனாய் கேட்க, செய்வதறியாது திகைத்தார் பெரியாழ்வர். நூற்றியெட்டு திருப்பதிகளிலும் எழுந்திருக்கும் உம் நாதன் யார், என வினவி, அத்துனை தலங்களிலும் உறையும் இறைவனை பற்றிபாடி, கிட்டத்தட்ட ஒரு சுயம்வரத்தையே நடத்தி முடித்தார். இறுதியாய் திருவரங்கன் பெருமையை கூற, கேட்கும்போதே உவகைகொண்டு திருவரங்கனையே எம் மணாளன் என கூறினார் ஆண்டாள். அன்று இரவு மீண்டும் அவர் கனவில் திருமால் மீண்டும் தோன்றி, "கவலைப்படாதீர்! உம்மகளை இங்கே அழைத்துவாரும்" என கூறிமறைந்தார். விஷயத்தை பாண்டிய மன்னனிடம் கூறி, மன்னன் ஏற்ப்பாட்டில் சோழதேசம் நோக்கி செம்பியர்கோனின் குலதெய்வம் காண, தம் மகளுடன் திருவரங்கம் சென்றார். தம் மகளை கைப்படித்து அழைத்து வந்த பெரியாழ்வாரை அனைவரும் வியப்புடன் கண்டு வழிவிட, நேரே கருவறை உள்ளே சென்ற ஆண்டாள், அரங்கனுடன் கருவறையில் கலந்தார். அதன்பின் மூவரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். இது ஆண்டாளை பற்றி திவ்யசூரிசரிதம் கூறும் சுருக்க கதை, இதனையே ஆண்டாளின் பாடலும் எடுத்துறைக்கிறது. ஆண்டாளின் கதாபாத்திரத்தை கற்பனையென்றும், அவரது கற்பனையில் உருவான கற்பனைச்செல்வியே ஆண்டாள் என்றும், ஆண்டாள் இயற்றியதாய் கூறும் பாடல்கள் பெரியாழ்வார் இயற்றியதே என கூறுவோரும் உள்ளனர். காதலின் வேகத்தை கூறும் பெரியாழ்வாரின் திருமொழிப்பகுதியே பின்னாளில் நாச்சியார்திருமொழி ஆனது, கோதைநாச்சியார் என அவரை உண்மையான பெண்ணாகவே ஆக்கிவிட்டதாகவும் கருத்துரை உண்டு.
ஆனால் ஆண்டாளின் பாசுரங்களை ஆராய்ந்தால், பெண்ணால் மட்டுமே உணரமுடியும் சில விஷயங்களை காட்சிபடுத்தியிருப்பது புரியும்.பெரியாழ்வாரின் திருமொழி பாவனைக்கும், ஆண்டாளின் பாவனைக்கும் வித்தியாசத்தை நன்கு உணரமுடியும்.
ஆண்டாளின் பாசுரங்கள்:
திருப்பாவையை சற்று ஆழ்ந்து உணர்ந்தால் அதில் மார்கழிமாதத்தின் நீரோட்டத்தையும், மழையின் தேவையையும், பாவை நோன்பும் குறிப்பிடத்தக்கது.தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு குறித்து உள்ளது.பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியதாகும். இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பு தைந்நீராடலாய் குறிப்பிடப்படுகிறது.
”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்"
மார்கழிமாத நீராடலின் சிறப்பினை மேற்கண்ட பாடலில் ஆண்டாள் உணர்த்துகிறார்.
அற்புதமான விஞ்ஞான குறிப்பொன்றை போகிறபோக்கில் ஆண்டாள் பாடிவிட்டு போகிறார்.
"ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்"
மழை தேவனே, நீ எப்படி மழை பெய்யவேண்டும் என்பதை ஆய்ச்சியர்களான நாங்கள் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரைகளிலிருந்து கால் நனைப்பதுபோல் அல்லாமல் ஆழமாகச் செல். முங்கி வேண்டுமட்டும் நீரைக் குடித்து, கறுத்த உடலாக மாறு. எப்படிப் பட்ட கறுப்பு தெரியுமா... ஊழிக்காலம் முதல் இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல் மாறு.
இன்றைய மழைபொழியும் அறிவியல் சொன்னதை எளிதாய் தம் பாக்களில் ஆண்டாள் கூறுகிறார்.
"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி,
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்"
வேதம் ஓதுபவர்களால் வானுலகத்தில் வாழும் வானவர்க்கு என்று செய்த வேள்வியில் போடப்பட்ட பொருட்களை காட்டில்திரியும் நரி வந்து முகர்ந்து பார்ப்பது எவ்வளவு தகாத ஒன்றோ, அதைப் போல சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் பிறிதொரு மானிடனுக்கு இல்லை என்று ஆவேசமாய் கூறி உலகளந்த உத்தமனுக்கே என் உடம்பு அவனுக்கென்றே ஆனவை விம்மி எழுந்த என் பருத்த முலைகள்என் உடல் சாதாரண மனிதனுக்கென்று பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் மன்மதனே என்று பாடுகிறார் ஆண்டாள். தம் அழகு ஓர் சுமையாய் உள்ளது என பாடிய பல பெண்மணிகளை முன்பே இலக்கியங்களை கண்டுள்ளோம். உதாரணமாய் காரைக்கால்அம்மை, அவ்வையார் முதலியோரை கூறலாம், அத்தைகைய ஒரு பெண்மணியே ஆண்டாள், ஆனால் இப்பாடலின் சாராம்சம் புரியாமல் அதனை சர்ச்சைக்குரியாதாக்குவது விந்தையானது.
"வாரணமாயிரம் சூழவலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்"
இப்பாடல் திருமணமாகாத பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாளின் திருப்பாவையில் "வாரணமாயிரம்' என்று தொடங்கும் பத்து பாசுரங்களை பக்தியுடன் படித்தால் நல்ல கணவனும் நற்குணம் கொண்ட குழந்தைகளும் பெறும் பாக்கியம் கிடைக்கும்' என்று நம்பிக்கையுடன் பாடி வருகின்றனர்.


No comments:
Post a Comment