பொய்கையாழ்வார்

 பொய்கையாழ்வார்:


முதலாழ்வார்களின் காலம்:


ஆழ்வார்கள் பன்னிருவரில் முதலாழ்வார்கள் என மூவர் போற்ப்படுவர். இவர்களில் முதலாமவர் "பொய்கையாழ்வார்", பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஏனைய இருவராவார்கள். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் என நம்பப்படுகிறது. இம்மூவரே வைணவமதத்தின் ஆதிகவிகள். சைவமத சமயக்குரவர்களை போல எளிதில் இவர்களின் காலத்தினை கணிப்பது சற்று சிரமமானது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சமண-வைதீக சமயங்களின் கருத்துமோதல்கள் திருமுறைகளின் வாயிலாய் தெரியவருவதாலும், முதலாழ்வார்களின் பாடல்களில் இத்தகைய பூசல்கள் எங்கேயும் காணப்படாததால்  இவர்களின் காலத்தினை உறுதியாய் 7ம் நூற்றாண்டின் முற்பகுதியாய் கூறலாம். இம்முதலாழ்வார்களை திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில்,


 "வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் 

      வேதம் உரைத்து இமையோர் வணங்கும் 

செந்தமிழ் பாடுவார்,தாம் வணங்கும் 

      தேவர் இவர்கொல்"

என்றும், "இன்கவி பாடும் பரமகவிகள்" எனவும் நம்மாழ்வாரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர "உபதேச ரத்தினமாலை" எனும் ஒரு நூல் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணவாள மாமுனிகள் என்னும் சமயப்பெரியோரால் இயற்றப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. இதில் முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியுள்ளது. இக்காரணங்களாலே இவர்கள் மூவரும் மற்ற ஆழ்வார்களுக்கு காலத்தால் மூத்தவர்கள் எனகூறுவர்.


முதலாழ்வார்கள் குறித்த புராண நம்பிக்கைகள்:


இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மூவரும் தாயின் வயிற்றிலே தோன்றாத அவதாரபுருஷர்கள் என்பது ஐதீகம். இம்மூவரும் தம்மை ஒருவயொருவர் அறியாமல், திருமால் நினைப்போடு பக்தியோடு ஊர் ஊராய் சுற்றி அழைந்தனர். இவர்களை ஒன்றிணைக்க எண்ணிய திருமால், அவர்களை திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை ஏற்ப்படுத்தினார். ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் படுத்தார்.


சிறிது நேரத்தில் பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் வைணவ மரபுப்படி ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது பொய்கையார் மற்றவரிடம், “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமர்ந்திருக்கலாம்”  என்றார். அவ்வாறே இருவரும் அமர்ந்த நிலையிலேயே பெருமானின் பெருமைகள் பற்றி உரையாடியிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது, முதலிருவரும் பேயாழ்வாரிடம், “இவ்விடம் இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றனர். அவ்வாறே மூவரும் நின்ற நிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.


அச்சமயம் திருமால் தம் திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் திரு ஆணைப்படி செறிவான இருள் சூழ்ந்தது,பெருமழை பொழிந்தது. பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அம்மூவரிடையே புகுந்து நெருக்குதலை உருவாக்கினார். சட்டென உருவான அந்த நெருக்கத்திற்குக் காரணம் அறியாமல் மூவரும் திகைத்தனர்.


பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார். இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு, உலகை வளைத்துக் கிடக்கும் கடலையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே தகழியாக்கினார்.தனது ஆர்வத்தையே நெய்யாக ஊற்றினார்,உருகும் தம் சிந்தையையே திரியாக அமைத்தார், ஞானத்திருவிளக்கை ஏற்றினார். இப்பெருமக்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை ஓட்டியது. அதன் வெளிச்சத்தில் பேயாழ்வார் பெருமானின் திருவடிவினைக் கண்டார். அவர் கண்ட காட்சியை மற்றைய இருவரும் பின்னர்க் கண்டனர். அவர்கள் பெற்ற வியப்புக்கு உரிய அந்த இறைக்காட்சியைப் பொருளாக வைத்து மூன்று திருநூல்களை வெளியிட்டருளினர். 

சான்றோருடைய தொண்டைமண்டலம் என சிறப்பித்து கூறுவதற்கேற்ப, தொண்டை மண்டலத்தில் தோன்றிய இவர்களால், தென்னகம் எங்கும் மெல்ல பரவி தமிழகம் முழுவதும் வைணவம் வியாபித்தது.


பொய்கையாழ்வார் பிறப்பு:


காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு குளத்தின் ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார் என்கிறது வைணவ மரபு. இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்சசந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அம்சம்  என்று வைணவர் கருதி வருகின்றனர்.  பொய்கையில் தோன்றியவராதலால் இவர் வைணவர்களால்

 பொய்கையாழ்வார் எனப்பட்டார். இவர் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


திருக்கோவலூரில் திருமாலின் திருவிளையாடலால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுதலை பெறுவதற்காக "வையம் தகளியா" எனத் தொடங்கி  100 வெண்பாக்களைக் கொண்ட அந்தாதி பாடலை இவர் பாடினார். அந்தம் என்பது இறுதியாகும், 

ஆதி என்பது தொடக்கமாகும்

அதாவது ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமைந்து தொடர்ந்திடும் பாடல் அமைப்புடன் கூடிய சிற்றிலக்கிய வகை அந்தாதி எனப்படும். 

ஒரு சொல் என்று கூட இல்லை. கடைசி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ கூட வரும் வண்ணம் அமைந்திருக்கலாம். இந்த இலக்கிய வகையை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று குறிப்பிடுகிறார். யாப்பருங்கலக் காரிகை இதை அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி என்று கூறுகிறது. சொற்றொடர் நிலை என்றும் சொல்வார்கள். பொய்கையாழ்வார் பாடிய பாடல்"முதல் திருவந்தாதி" என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் பாடிய நூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் சிறப்பான சில பாடல்களை காண்போம்.


1)"வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக,செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று"


(எல்லாம்வல்ல இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை பொய்கையார், இறைவனின் மேன்நிலைக்கேற்ப பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனையே அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது பொய்கையாரின் நம்பிக்கையாகும்"


2) இவரது 77ம் பாடலில் விண்ணகர் எனும் கோவில்  குறித்து ஒரு தகவல் வருகிறது. இஃது பரமேஸ்வர பல்லவனால் கட்டப்பட்ட "பரமேஸ்வர விண்ணகரம்" ஆகும், இப்பல்லவ மன்னன் 7ம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்தவர், இதனை வைத்து முதலாழ்வார்களின் காலத்தினை சிலர் ஏழாம் நூற்றாண்டு என்கின்றனர். சம்பந்தர்பெருமான் பாடிய நிறைய தலங்கள் அவர்காலத்திற்கு குறைந்தது 200 வருங்கள் முன்புள்ள கோவில்களே. அக்கோவில்களை எவ்வாறு 7 ம் நூற்றாண்டு என ஏற்கவியலாதோ அதேபோல்தான், பொய்கையாழ்வார் பாடிய விண்ணகரகோவில், பிற்காலத்தில் பரமேஸ்வர பல்வனால் புணரமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும், பொய்கையாழ்வார், எவ்விடத்திலும் "பரமேஸ்வர விண்ணகரம்" என கூறவில்லை, மாறாய் விண்ணகரம் என்றே கூறுகிறார். இதிலிருந்து அவர் 7 ம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டவரே என உறுதியளிக்கலாம்.


"வேங்கடமும் விண்ணகரும் வெகாவும், அகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,

என்றால் கெடுமாம் இடர்"


இதில் வரும் வெகா என்து திருவெஃகா ஆகும், இத்தலத்திலுள்ள பெருமாள் "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என அழைக்கப்படுகிறார். இப்பகுதி இன்று "சின்ன காஞ்சிபுரம்" என பொதுவழக்கில் அழைக்கப்படுகிறது.


தமிழகத்தில் விண்ணகரம் என்ற பெயரில் ஆறுகோவில்கள் உள்ளன.


1.திருவிண்ணகர்(ஒப்பிலியப்பன் கோவில்)

2.காழீச்சிராம விண்ணகரம்(சீர்காழி)

3.நந்திபுரவிண்ணகரம்(நாதன் கோவில்)

4.அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

5.வைகுந்த விண்ணகரம்(திருநாங்கூர்)

6.பரமேஸ்வர விண்ணகரம்(காஞ்சி)


இக்கோவில்கள் பொய்கையாழ்வாருக்கு காலத்தால் பிற்ப்ப திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த ஆறுகோவில்களும் பொய்கையாழ்வார் காலத்தில் எழுப்பப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. 

இதில் வேங்கடத்தில் நின்றகோலமாகவும், விண்ணகர் எனும் தலத்தில் அமர்ந்த கோலமாகவும், திருவெஃகாவில் கிடந்த கோலமாகவும், கோவலூரில் நடந்த கோலமாகவும் இருந்ததாய் பொய்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.


3)இன்றைய காலகட்டத்தில் வைதீக மதத்தின் ஆறு பிரிவுகள் இணைந்து, ஒருங்கிணைக்கப்பட்ட மதமாய் மாறிவிட்டது, ஆனால் மன்னர் காலம் வரையில் சைவ-வைணவ மோதல் ஆங்காங்கே நடைபெற்று இருந்ததது. பொய்கையாழ்வாரின் காலத்திலும் இச்சண்டை தொடர்ந்தது போலும், அரியும்-சிவனும் ஒன்றே எனும் கருத்தினை பொய்கையாழ்வார் கீழ்வரும் பாடலில் உணர்த்துகிறார்.


"பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,

நின்றுலகம் தாய நெடுமாலும்,  என்றும்

இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்

ஒருவனங்கத் தென்று முளன்"


பொன்னார்மேனியன் சிவனும், நின்றே உலகளந்த பெருமானும் ஈருடலில் உலாவினாலும், இருவரும் ஒருவரே என்கிறார்.


4)இறைவன் எங்கும் உள்ளவன், அவரை நினைத்து பார்த்தால் போதும், இதற்காக பாற்கடலுக்கோ, திருப்பதிக்கோ செல்லத் தேவையில்லை என அழகுதமிழில் பாடுகிறார். சில நாட்களுக்கு முன்புவரை திருப்பதியிலுள்ளது பெருமாள் அல்ல, மலைக்காளி, முருகர் என்ற கருத்துரை பரப்பப்பட்டது. பழம்பெரும் பொய்கையாழ்வாரே வேங்கடத்திலுள்ளவர் பெருமாள் என்கிறார், இது ஒன்று போதாதா? நிரூபிக்க,


"உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத்  துளன்கண்டாய்,

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தி னுள்ளனென் றோர்"


இவர் ஆறு தலங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.


இவரது தோற்றம் மற்றும் மறைவு குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை, புராணகதைகள் அதிகம் நிறைந்த குருபரம்பரை கூறும் தகவல்களையே வைணவர்கள் ஏற்றுக்கொள்வர் அதன்படி,


"துலாயாம் ச்ரவணே ஜாதம் 

காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்

த்வாபரே பாஞ்சஜந்யாம்சம் 

ஸரோயோகிந மாச்ரயே"


ஸ்ரீபாஞ்சஜந்ய அம்சத்தில், துவாபரயுகத்தில்,862901-வதான சித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் சுக்ல பட்சம் அஷ்டமி திதிசெவ்வாய்க்கிழமை கூடிய திருவோண நட்சத்திரத்தில், ஸர்வேஸ்வரனை பிரம்மா அஸ்வமேத யாகத்தால் ஆராதித்த இடமான காஞ்சிபுரத்தில், புண்ணியத்தை பெருக்கத் தக்க திருவெஃகாவில், யதோக்தகாரி ஸந்நிதிக்கு அடுத்த பொய்கை புஷ்கரணியில்விகஸித்த பொற்றாமரை மலரில், அயோநிஜராய் அவதரித்து, ஒப்பிலாத பகவத் பக்தியுடையவராய் எழுந்தருளியிருந்தார்.


பொய்கையாழ்வார் வரலாறு முற்றிற்று🙏🙏🙏




No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...