பெரியாழ்வார்-05
ஸ்ரீவில்லிப்புத்தூர் வரலாறு:
"பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று"
எழில்மிக்க முத்துக்களின் பிறப்பிடமாய் விளங்கியது பாண்டியநாடு, அந்நாட்டில் ஆங்காங்கே பொய்கைகளும், ஊருணிகளும் நிறைந்து வளமை செய்தது. இப்பழம்பதியில் புத்தூர் என்ற ஊர் ஒன்று உண்டு, கடும்வனமான அப்பகுதியில் பல வேடர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்குல தலைவனுக்கு, தலைவியாயே மல்லி என்பவள் வாழ்ந்துவந்தாள்.வில்லி என்றும் கண்டன் எனும் மாந்தர்களை ஈன்று சீறும் சிறப்பாய் வாழ்ந்து வந்தாள் மல்லி. அவ்விரு குழந்தைகளும், காளையர் பருவம் எய்தியவுடன், தம் தந்தையர் விருப்பத்திற்கேற்றவாரு வேடர் குல தலைவர்கள் ஆயினர். சகோதரர்கள் இருவரும் தம்குல வமைப்படி வேட்டைக்கு சென்று பல விலங்கினங்களை கொன்று குவித்தனர். அதில் லாவகமாய் ஒருபுலி தப்பித்து ஓட, அதனைபின் சென்று துரத்தியவாறே கண்டன் ஓடினான், மறைந்து நின்ற புலி கண்டனை அடித்து கொன்றது. தம் சகோதரனை நீண்டநேரம் காணாததால், வில்லி காட்டிற்குள் சென்றுதேட அங்கு இறந்துகிடந்தான் கண்டன். அந்த கோரகாட்சியை கண்டு அழுது மூர்ச்சயடைந்தான் வில்லி, அப்போது கனவில் தோன்றி காட்சியளித்து அருளினார் திருமால், அருகேயுள்ள புத்தூரில் தமக்கு மிகப்பெரிய கோவிலெழுப்பி அங்கு தம்மை குடியேற்ற ஆணையிட்டார். மேலும் அருகேயுள்ள குகையில் உம்சகோதரனை கொன்ற புலியின் குகை உள்ளது. அங்கே நிறைய செல்வங்கள் உள்ளது. உம் சகோதரனும் உயிர்த்தெழுவான் என அருளினார். இறைவன் கூறிய அனைத்தும் நடந்தது. வில்லியும் திருமால் கனவில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றினான், மிகப்பெரிய கோவிலெழுப்பி புத்தூர் என்ற பெயருடன் தம் பெயரையும் இனைத்து "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என புதுநாமம் சூட்டினான்.
பெரியாழ்வார் தோற்றம்:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மறையவர் குலத்தில் வேயர்கள் எனும் ஒருபிரிவு இருந்தது. அதில் முகுந்தபட்டர் எனும் முன்குடுமி பிராமணர் இருந்தார்,பதுமவல்லி எனும் பெண்ணை மணந்து, அவர்கள் வாழ்ந்த நல்வாழ்க்கைக்கு அருந்தவப்புதல்வன் ஒருவன் பிறந்தான். இன்றுவரை நாம் அவரை பேசுபொருளாய் கொண்டுள்ள ஞானகுழந்தை அது. அவருக்கு பெற்றோர் இட்டபெயர் "விஷ்ணுச்சித்தர்"
ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர். இவர் திருமாலின் கருடவாகன அம்சமாய் கருதுவர். திருமாலுக்கு செய்யும் தொண்டுகளில் ஏது சிறந்ததென சிந்தித்து "பூவையே பூவண்ணணுக்கு பூமாலை கட்டி சமர்ப்பிப்பதே சிறந்த கைங்கரியம்" என முடிவெடுத்து மிகப்பெரிய அளவில் நந்தவனம் அமைத்து, அதில் விளைந்த பூக்களை மாலையாய் கோர்த்து தினமும் திருமாலுக்கு சாற்றி வருவதையே வழமையாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.
மன்னர் வருகை:
பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஸ்ரீவல்லபன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சி செய்தான். நகர்வலம் இரவில் வருகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வீதியின் திண்ணையில் ஒரு அந்தணன் உறங்கியிருக்க, அவரையெழுப்பி மன்னன் விசாரித்தார். தான் திவ்யதேச யாத்திரை செல்வதாய் அவன் பதிலுரை அளித்தான். தனக்கு ஒரு நீதி ஒன்றை சொல்லுமாறு வேண்ட,
"மழைக்காலத்தில் வேண்டியதை மற்றை எட்டு மாதங்களிலும்,இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இரவிலும், மறுமைக்கூ வேண்டியதை இம்மையிலும்" தேடுக எனும் பொருள்பொதிந்த ஸ்லோகம் சொல்லி முடித்தான்.மன்னனுக்கு இச்சொல் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. அரண்மனைக்கு சென்ற மன்னனுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை, மறுநாள் புரோகிதரான செல்வநம்பியை அழைத்து, மறுமையில் இன்பம் பெற வழி என்ன? என கேட்க, அவருக்கும் விடைதெரியாமல், நாடெங்கிலும் உள்ள சமயபெரியோர்களை அழைத்து விவாதம் நடத்த யோசனை கூற, அக்கூட்டத்தில் விஷ்ணுசித்தனும் கலந்து கொண்டு "மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்நெறி" என்று நிறுவ, மண்டபத்திலுள்ள பொற்கிழி தானே கீழேவிழ, அதை ஏந்திக்கொண்டார் விஷ்ணுசாத்தர். அவ்விக்கம் மன்னனுக்கு திருப்தியளிக்க, "பட்டர்பிரான்" என்று பட்டமளித்து அவையில் அவரை பெருமைபடுத்தினார்.மேலும் அவரை யானைமேல் அமர்த்தி நகர்வலம் வரச்செய்தார், அச்சமயம் கருடன்மேல் அமர்ந்து திருமால் வாணில் காட்சியளித்தார். இறைவனையே நேரில் கண்டதால் விஷ்ணுசித்தர், பெரியாழ்வார் ஆனார்.
பெரியாழ்வார் காலம்:
இவ்வாழ்வார் காலத்தில் புறச்சமயமமான சமண, பௌத்தம் ஆகியவற்றை பற்றி இவ்வாழ்வார் பாடவில்லை, இவர்நடத்திய சமயவாதம் சைவமதத்தினுடேதான். ஸ்ரீவல்லபதேவன் எனும் பாண்டிய மன்னரை குருபரம்பரை கூறுகிறது. ஆனால் பெரியாழ்வார் தம் பாசுரத்தில்
"கோ நெடுமாறன்" என்ற பாண்டியரை பாடுகிறார். சம்பந்தரின் சமகாலமான "நின்றசீர் நெடுமாறன்" சைவமதத்தை சேர்ந்தவர்.ஆனால் இவரது மகனான பராந்நக நெடுஞ்சடையன் பரம வைஷ்ணவர் எனவே இவரது காலமே பெரியாழ்வர் காலம், அதாவது எட்டாம் நூற்றாண்டு என்பது மு.இராகவைய்யங்காரின் கருத்து, இக்கருத்தை பொதுவாய் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பெரியாழ்வார் பாசுரங்கள்:
பெரியாழ்வார் அருளிச்செய்த இரு பிரபந்தங்களுள் முதலாவது "திருப்பலாண்டு" என்பதே. இதில் பன்னிரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் "பல்லாண்டு பல்லாண்டு" என்று ஆரம்பிக்கும். பல்லாண்டு பாடுதலை மங்களாசாசனம் என்கிறது வைணவமரபு.
கண்ணனை குழந்தையாய் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாணியில் பெரியாழ்வார் நிறைய பாசுரம் பாடியுள்ளார். இன்றும் நம் வீடுகளில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த, காக்கையை விளையாட்டிற்கு அழைப்பர்,
"காக்கையே கண்ணுக்கு மை கொண்டுவா"
"காக்கையே முடிவார சீப்பு கொண்டுவா" என பெரியோர்கள் விளையாட்டாய் பாடுவர், இதனையே 1200 வருடம் முன்பு பெரியாழ்வாரும் பாடியுள்ளார்,
"திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்"
"வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா"
"கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா"
"கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா
இன்றைய நம் வீடுகளில் குழந்தைக்கு சோறூட்ட அழைக்கும் காக்கையை கண்ணனுக்காய் அன்றே அழைத்துள்ளார் பெரியாழ்வார்.
அன்றைக்கு புழக்கத்தில் இருந்த உணவுபழக்கத்தையும் தன் பாடலில் காட்சிப்படுத்துகிறார்,
"கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே"
கும்மாயம் என்பது அவித்தபயிருடன் நாட்டுச்சக்கரை கலந்து உண்ணும் உணவினை, பெரும்பாணாற்றுப்படை "கும்மாயம்" என்கிறது. மணிமேகலை இதனை "பயிற்றுத்தன்மை கெடாது கும்மாயமியற்றி" என்கிறது. இந்த கும்மாயஉணவு நிறைய கல்வெட்டுகளில் பயின்று வருகிறது!
சொத்தை சேர்த்துவைத்து, கடைசிகாலத்தில் அது மறந்துபோய், சுற்றத்தார் வினவ, பதிலும் சொல்ல இயலாது நிலைவருமுன், நெஞ்சினிலே நாதனுக்கு கோவிலெழுப்பி அதில் பூவிடுங்கள் என்கிறார் இவ்வாழ்வார்
"சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமா"


No comments:
Post a Comment