பூதத்தாழ்வார்-02
ஐப்பசி அவிட்டத்தில் இவர் அவதரித்ததாய் குருபரம்பரை கூறுகிறது. திருக்கடல்மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில், அழகிய குருக்கத்தி மலரில் பூதத்தாழ்வார் அவதரித்தாய் ஐதீகம்.இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை ஆகும், இவர் தனது பாசுரங்களில் தன்னை "பெருந்தமிழன்" என பெருமை பொங்க அழைத்துள்ளார். இவர் திருமாலின் ஆயுதமான "கௌமோதஹி" எனும் கதாயுத அம்சமாய் தோன்றியவர். இவர் பதிமூன்று திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இவ்வுலகின் பந்தங்களை அறுத்து, திருமாலின் திருவடிப்பேற்றை எண்ணியே தம் வாழ்நாளை கழித்தவர். தம் மனதிற்குள்ளாகவே தம் நாதனுக்கு ஓர் கோவில் உருவாக்கி, அதற்குள்ளாகவே ஞானநீரால் நீராட்டி, திருமாலது திருவடிகளில் தம் அன்பினையே மலராக அர்சித்து வருவதனையே வாடிக்கையாய் கொண்டார்.
பூதம் என்னும் வடசொல்லானது "பூ" என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது. சத்து என்றால் அறிவு என்று பொருள்.திருமாலின் திருக்குணங்களை அனுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர். இக்காரணங்களால் இவர் "பூதத்தாழ்வார்" என அழைக்கப்பெற்றார்.
பூதத்தாழ்வாரின் பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதி எனப்படும்! இது இயற்பா என்னும் பிரிவில் வரும்.தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 வெண்பாக்கள் அடங்கியுள்ளது. இப்பாடல் தோறும் திருமாலின் நற்குணங்கள் பற்றிய புகழ்ச்சியும், அவருடைய அருட்செயல்களும் நிரம்பி வழியும்.
பூதத்தாழ்வாரின் பாடல்கள் இயல்பு:
திருக்கோவலூரில் எம்பெருமானின் ஆசியால் முதலாழ்வார்கள் மூவரும் அங்குசூழ்ந்த மையிருட்டில் தமது கைங்கர்யங்களின் மூலம் திருமாலை உளமார கண்டர், அக்கதை குறித்த குறிப்பு கீழுள்ள சுட்டியில் காண்க
https://aalvaarkalvaralaru.blogspot.com/2021/05/blog-post_11.html
இதில் பூதத்தாழ்வாரின் பக்தி எவ்வாறெனில், அவர் தம்அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ் கொண்டு ஏற்றுகின்றேன் என்பவர்.
ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார் இவர்.
மலர்கள் நிறைந்த கொடி கொம்பை நாடிப் படர்வது போல, தம் மனம் நிலவைக் கடந்து வானத்தின் உச்சியை நோக்கி, அருள் செல்வம் வழங்கும் பெருமானைத் தேடி ஓடுகின்றது என ஓர் பாடலின் உவமை வழி தம் சிந்தையை விளக்குகின்றார்.
தளிர்கள் நிறைந்த கொடி படர்வதற்குக் கொம்பைத் தேடுவது இயல்பு. அதுபோல இறைப்பற்று மிகுந்திருக்கும் தம் உயிர் அருள் நிறைந்திருக்கும் இறைவனை நாடிச் செல்வது இயல்பு என்கிறார் பூதத்தாழ்வார்.
பூதத்தாழ்வார் பாசுரங்கள்:
தம் அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை திரியாக்கியதை நாலாயிர திவ்யபிரபந்தத்தின் கீழ்க்கண்ட பாடலில் விளக்குகிறார்,
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், வானத்
தணியமர ராக்குவிக்கு மதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு
மற்றுமொரு பாடலில் இப்பூலகில் எமக்கு எந்த அரசப்பதவி கிடைத்தாலும், தேவலோகத்து பதவியே கிடைத்தாலும், எம்பெருமானின் திருமாலை வணங்கும் பேரு ஒன்றே போதும் என தம் மனவோட்டத்தை விளக்குகிறார்.
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.
“யாமே சிறந்த தமிழன்,தமிழனாக இருப்பதனால் நான் நல்லவன் ஆனேன், முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். தமிழிலே நல்ல பாமாலை உன் திருவடிகளிலே சூடத்தக்க தாகக் கூறினேன்” மேலும்
“யானே பெருந்தமிழன் நல்லேன்” என்று தமிழை சிறப்பித்து கூறி, தம்மை பெருந்தமிழன் என பெருமைபொங்க சிறப்பாய் பாடுகிறார் பூதத்தாழ்வார்.
"யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது"
வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை, பிராமணண் ஒழுக்கத்தை மறக்கக்கூடாது என திருவள்ளுவரே தம் குறளில் கூறுகிறார், ஆனால் பூதத்தாழ்வாரோ ஒருபடி மேலேபோய், வேதமே ஒரு விஷயமில்லை, எம்பெருமான் மாதவன் பெயரினை உச்சரித்தாலே போதும் என்கிறார்.
ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமி னேழைகாள், ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
இவரின் பாடல்களையே தனித்தனி பதிவாய் இடலாம், அவ்வளவு சிறப்பு வாய்ந்தது .

No comments:
Post a Comment