திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

 திருமங்கையாழ்வார்-07


திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்:


உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பதையே உலகின் அனைத்து மதங்களின் நெறியாய் உள்ளது. திருமங்கையாழ்வார் தான் இறையருள் பெரும் முன்னர் வழிப்பறி செய்தும், உயிர்களை துன்புறுத்தியும் இரவில் ஓர் வாழ்க்கையும், பகலிலே பக்திமானாகவும் இருவாழ்க்கை வாழ்ந்தார். இறைவன் தன்னை தடுத்தாட்கொண்ட பின், தனது பழைய வாழ்க்கையை எண்ணி வருந்தி கீழ்க்கண்டவாறு பாடுகிறார்,


"கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் 

கண்டவா திரிதந்தேனேலும் 

தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் 

சிக்கெனத் திருவருள் பெற்றேன் 

உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் 

உடம்பு எலாம் கண்ண நீர் சோர 

நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் 

நாராயணா என்னும் நாமம்"


இவ்வரிகளை ஆய்ந்தால் இதற்குமுன் தான்புரிந்த கொலைகள் மற்றும் நெறிகெட்டவாழ்க்கையை எண்ணி மனம் வருந்தியது புலப்படும்.


மனிதன் நன்னெறிகளை கடைபிடிக்கவெனில், அவன் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் உழவேண்டும்,ஆனால் இவ்வாழ்வார் இந்த சக்கரத்தில் விழாது இறைவனிடம் பக்தி கொண்டமையை,


“சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்

காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்

ஓதல் செய் நான்மறை ஆகி, உம்பர்

ஆதல் செய் மூவுருவானவனே"


என்ற தம் பெரியதிருமொழியில் கூறுகிறார்.


வெற்றியும், தோல்வியும் மனிதவாழ்க்கையில் மாறிமாறிவரும், எனவே எந்நிலையிலும் சமநிலையில் இருக்கவேண்டும்,எனவே தம் மனதினை இறைவனிடத்தே ஒப்படைத்தால் அனைத்தும் அவன்செயல் எனும் தெளிவு உண்டாகும் என்பதனை,


"பரம நின் அடியினை பணிவன்,

வருமிடர் அகல -மாற்றோ வினையே"


இறைவனை தொழுபவர்க்கு தீவினை, நல்வினை எதுவும் சேராது என்கிறார்.


இவருடைய பெரியதிருமொழிக்கு தனியன் பாடிய ஆழ்வான், 


"நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி

நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்

அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம்,பரசமயப்

பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே"


எனப்பாடும் பாடலை சற்று ஆராய்ந்தால், திருமொழியின் புகழ் மனிதனின் அறியாமையை போற்றும் அகல் போன்றது என்றும், பிறவாமையை தந்து இறைவனை அடையும் வழியென்றும், தமிழ் இலக்கியங்களில் எழுத்து, யாப்பு, சொல், பொருள், அணி, ஆகியவற்றை முறையாய் பெற்று விளங்கும் பேரிலக்கியம் என்கிறார்.


இவரது பாட்டமைப்புகளில் திருவேழுகூற்றிருக்கை என்பது மிகவும் கடினமான ஒன்று.இதனை திரு+ஏழு+கூற்று+ இருக்கை என பிரிப்பார்கள்,இவரின் கூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது, நிலைமண்டில ஆசிரியப்பா எனும் வகையை சேர்ந்தது.


ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து 

மங்கையர் இருவரும் 

மலரன அங்கையில் முப்பொழுதும் 

வருட அறிதுயில் அமர்ந்தனை, 

நெறிமுறை நால்வகை 

வருணமும் ஆயினை 

மேதகும் ஐம்பெரும் 

பூதமும் நீயே அறுபதம் 

முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை 

அடங்கச் செற்றனை அறுவகைச் 

சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் 

ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல் 

நான்கவையாய் 

மூர்த்தி மூன்றாய் 

இருவகைப் பயனாய் 

ஒன்றாய் விரிந்து 

நின்றனை. 


இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.



திருமங்கையாழ்வார் பகுதி-02

 திருமங்கையாழ்வார்


பகுதி-02


பரகாலரின் வழிப்பறி:


சோழனின் கடனை அடைத்தபின், அடியாருக்கு தினமும் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் செய்து வந்ததனால் கையில் இருந்த இருப்பு மீண்டும் கரைய ஆரம்பித்தது. ஆழ்வாரின் மனது கலங்க ஆரம்பித்தது. அப்போதுதான் அந்த விபரீதஎண்ணம் மனதில் உதித்தது, வழிப்பறி செய்து அதில் கிடைக்கும் பணத்தினை கொண்டு அடியார்களின் பசியாற்றுவோம் என எண்ணினார். நீர்மேல்நடப்பான், நிழல்மேல்ஒதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரையும் துணைக்கு வைத்து களவாங்க ஆரம்பித்தார். பாதசாரிகளை தாக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்து வழக்கம்போல் பாகவதர்களுக்கு அன்னமிட்டு உபசரித்து மகிழ்ந்தார்.

நாள்தோறும் இவ்வாறே நடக்க, தான் செய்துவருவது தவறு என்பதே அவர் அறியாமல் வழமையாக தொடர்ந்தார். பரம்பொருளான திருமால் அவரை சோதிக்க எண்ணி ஒரு முறை பெருமாள் பிராட்டியுடன் மணக்கோலத்தில் வந்தார்.  ஆழ்வார் தன் படையினருடன் அந்தத் தம்பதிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டார். ஆனால் கால் அறுகாழியை(மெட்டி) மட்டும் பெருமாள் கழட்டவில்லை. ஆழ்வாரும் அறுகாழியைக் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்றார்.


ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுத்தார். “எம் கலியனோ?”  என்று பெருமாள் ஆழ்வரைப் பார்த்து வியந்தார். பின்பு தாம் கொள்ளைகொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, “நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம், சொல்?” என்று கேட்டார். பெருமாள் ஆழ்வாரை அருகே அழைத்து, அவர் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை,  பரகாலர் கொள்ளையடித்து, அதன்பின் உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு  “திருவேடுபறி” என்று பெயர், இன்றும் பல திவ்ய தேசங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் இது மிகப்பிரசித்தம்.

பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)

திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)

திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)

திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)

சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)

பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)

ஆக இவர் மொத்தம் ஆறு திவ்யப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இவர் முழுமையாக 1000 பாடல்களுக்கு மேல் பாசுரங்கள் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவர் இயற்றிய பாசுரங்களின் சிறப்பான பகுதிகளை நாளை காண்போம். அவற்றில் ஒரு சிறு எடுத்துக்காட்டு,


ஒன்றிலிருந்து ஏழுவரை படிப்படியாய் ஏற்றி இறக்கி இயற்றப்படும் செய்யுள் "ஏழு கூற்றிருக்கை" எனப்படும். இதனை தேர்பந்தம் எனப்படும் சித்திரக்கவியாகவும் அமைத்து காட்டப்படும்,


இதனை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார், நாளை அவரது பதிகங்களின் சிறப்புகளை காண்போம்.




திருமங்கை ஆழ்வார் 07

 திருமங்கையாழ்வார்:07


பகுதி-01


"பொங்கு புகழ் மங்கையர்கோன் ஈந்த மறைஆயிரம் அனைத்தும் தங்கும் மனம்" என இராமானுஜர் திருமங்கையாழ்வாரை புகழ்ந்து பாடுகிறார். 1084 பாசுரங்களை இவர் பாடியுள்ளார். இவர் கி.பி 9ம் நூற்றாண்டில் சோழநாட்டில் திருவாழிநாட்டில் திருக்குறையாலூர் எனும் ஊரிலுள்ள ஆழிநாடன் என்ற சோழமன்னனின் முதன்மை தளபதிக்கும் அவர் மனைவி வல்லித்திருவிற்கும் மகனாய் தோன்றியவர் இவ்வாழ்வார். 

திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள் நீலன் என்னும் திருநாமம் சூட்டினார்.இவர் தந்தை இறந்தபின் சோழனுக்காக பல போர்களில் கலந்து வெற்றியை மன்னர் முன் சமர்ப்பித்தார், எனவே சோழன் இவருக்கு "பரகாலன்" எனும் பட்டமளித்து நீலனின் வீரத்தைப் போற்றி, அவரைத் திருவாலியின் குறுநில மன்னன் ஆக்கினார்.


குமுதவல்லியுடன் காதல்:


திருவெள்ளகுலம் எனும் நகரிலுள்ள பொய்கையில் "திருமாமகள்" எனும் பெயருடைய பெண்ணொருத்தி தாமரைமலரை கொய்துகொண்டிருந்தாள், அச்சமயம் அங்குவந்த வைஷ்ணவர் ஒருவர், அதனைகண்டு "பெண்ணே நீ யார்?" என வினவ, நான் ஒரு தேவமங்கை "சுமங்களை"என்பது என் பெயர், ஒருமுறை நான் என் தோழிகளுடன் சென்று குரூபியாய் இருந்த சித்தர் ஒருரை கேலி செய்தேன்.அச்சமயம் ஞானநூல்களை அத்யஞனம் செய்துகொண்டிருந்த கபிலாச்சாரியார் எனை கண்டு, அச்சித்தரின் மகிமையறியாத பேதை நீ, இனி மனிதஉருவெடுத்து மண்ணில் பிறப்பாய்! அதுமின்றி நீ ஒரு மிலேச்சனுக்கு மனைவியாவாய்! என கடுமையாய் சபித்தார். நான் காலில் விழுந்து மன்னிப்புகோரவே, மனமிறங்கி கொடுத்த சாபம் திருப்ப இயலாது, எனவே நீ திருவாழி நாட்டு மன்னனை திருத்தி வைணவராக்கினால் அவர்மூலம் நீ நற்கதியடைவாய்! இல்லையெனில் நீ நிர்மூலமாவாய்,அவர் சாதாரணமானவர் அல்லர், விஷ்ணுவின் ஆயுதமான சார்ங்கத்தின் அம்சமானவர்.அவரை மணந்து ஹரிபக்தனாக்கி சுகப்படுவாயாக, என அருளிச்சென்றார். என தன் கதையை கூற, அவள் கதையை கேட்ட அந்த வைஷ்ணவர், குழந்தைப்பேறு இல்லா தனக்கு பகவான் அழைத்த கொடை என அவளை அழைத்துச்சென்றார். அக்குழந்தையின் கதையினை தன் இல்லாளிடம் கூடி, "குமுதவல்லி" எனும் திருநாமமிட்டு வளர்த்தனர். அக்கன்னியும் பெதும்பை பருவமடைந்து, பக்தியால் ஊர்மெச்ச வாழ்ந்து வந்தாள், குமுதவல்லியின் புகழைகண்டு அவளை மணம் செய்ய திருநாங்கூரிலுள்ள அந்த வைஷ்ணவரின் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

 பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.


 ஆனால் குமுதவல்லியாரோ, ‘திருவிலச்சினையும், திருநாமமும் உள்ள வைணவனுக்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்’ என்று மறுத்துரைத்தாள்.

மேலும் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மொழிந்தாள்.


இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்.


வைஷ்ணவரான நீலர்:


நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார்.

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்சசம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நீலர்தான்.


அதன்பின் ஓர் நன்னாளிலே குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.

தம் மணவாட்டிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தினமும் ஆயிரம் பாகவதர்களை அழைத்து, அவர்களின் தேவையறிந்து பொருளுதவியும், அண்ணமும் அளித்துவந்தார். குன்றகுன்ற குன்றும் மாளும் என்தற்கேற்ப, அவரது செல்வமும் தீரஆரம்பித்தது, எனவே சோழமன்னருக்கு அளிக்கவேண்ட கப்பம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது, நீலனின் வீரத்தை நன்கு அறிந்த சோழமன்னன், நீலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்பதால், நீலனை தந்திரமாக அழைத்து ஒரு கோவிலில் சிறை வைத்தான். அங்கே உணவுகொள்ள விருப்பமில்லாது மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நீலனின் கனவில் அத்திகிரி அருளாளனான காஞ்சிப் பெருமாள் வரதராஜர் தோன்றினார்.

நீலரை காஞ்சிக்கு வருமாறு சொன்னார். வந்தால், அவர் பட்டிருக்கும் கடனைத் தீர்ப்பதாக அறிவித்தார்.

வரதராஜ பெருமாளின் ஆணையை அரசுக்குத் தெரிவித்தார் நீலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்பதை நன்கு உணர்ந்த அரசன், ஒரு சிறு குழுவை அவரோடு காஞ்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கே, மீண்டும் நீலன் கனவில் தோன்றிய காஞ்சி வரதன், புதையல் இருக்கும் இடத்தை காண்பித்துக் கொடுத்தார்.

அதன்படி, வேகவதி ஆற்றின் கரையில் தோண்டினார் அவர். பெரும் புதையலைக் கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்தினார். மீதம் இருந்ததை அன்னதானத்துக்கு எடுத்து வைத்தார். அடுத்து, திருமங்கை நாட்டின் விளைச்சலில், பேரரசுக்குச் சேர வேண்டிய நெல்லினைக் கேட்டனர், சோழ மன்னனின் அதிகாரிகள். நீலரோ, காஞ்சிப் பேரருளாளனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டபடியே, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார்.

என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல் துகள் அனைத்தும் நெல்மணிகளாயின! நீலனின் பெருமையை, தெய்வம் அவருக்குத் துணை நின்றதை அறிந்த அரசன், தன் தவறுக்கு வருந்தினான். அவர் திருமங்கை நாட்டை சுதந்திரமாக ஆள்வதற்கு வழிவிட்டான்.


எம்பெருமான் திருமாலுக்காக திருமங்கையாழ்வார் வழிப்பறி செய்ததையும், அவர்கால சமூக அமைப்பையும்,அவரது சிறப்பான பாசுரங்களையும் அடுத்தடுத்த பகுதியில் காண்போம்.



ஆண்டாள்: பகுதி 02

 ஆண்டாள்: பகுதி-02


"குன்றாடு கொழுமுகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல்

நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்

குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி

மன்றூடு தென்றலுமாம் மதிள் அரங்கம் என்பதுவே"


குவளைமலர், மயில், கடல், மேகம் போன்றவற்றில் உறைந்திருக்கும் நீலநிறத்தினை உடையவர்,


(இந்த வருணனையை கொஞ்சம் பூசினாப்போல எழுதியதே, அலைபாயுதே திரைப்படத்தில் வரும் பச்சை நிறமே பாடல், அதில் ஒவ்வொரு வண்ணத்தை பற்றி கூறுகையில், நீலநிறம் வரும் பகுதியில் இப்பாடலை இன்றைக்கு ஏற்றவாறு மாற்றி கையாண்டிருப்பார் வைரமுத்து அவர்கள்,


"அலையில்லாத ஆழி வண்ணம்,

முகிலில்லாத வானின் வண்ணம்,

மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்,

குவளைப் பூவில் குழைத்த வண்ணம்,

ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்,

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்!

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்")


அவ்வூர்களிலுள்ள குன்றின் வழியே (அநேகமாய் பொன்மலை, திருவெறும்பூர் உறையூர் சோழப்பாறையாய் இருக்கும்)சோழையினுள்ளே நுழைந்து, மெல்லிடைப்பெண்களின் மார்பை தொட்டு உலாவி மன்றத்தில் ஆடும் தென்றலும் மதில்களும் கொண்டது திருவரங்கம்,


இவ்வாறு தான் புகழ்ந்து பாசுரம் இயற்றிய எம்பெருமான் திருமாலையே தம்மகள் விருப்பத்தோடு தம் கணவனாய் கேட்க, செய்வதறியாது திகைத்தார் பெரியாழ்வர். நூற்றியெட்டு திருப்பதிகளிலும் எழுந்திருக்கும் உம் நாதன் யார், என வினவி, அத்துனை தலங்களிலும் உறையும் இறைவனை பற்றிபாடி, கிட்டத்தட்ட ஒரு சுயம்வரத்தையே நடத்தி முடித்தார். இறுதியாய் திருவரங்கன் பெருமையை கூற, கேட்கும்போதே உவகைகொண்டு திருவரங்கனையே எம் மணாளன் என கூறினார் ஆண்டாள். அன்று இரவு மீண்டும் அவர் கனவில் திருமால் மீண்டும் தோன்றி, "கவலைப்படாதீர்! உம்மகளை இங்கே அழைத்துவாரும்" என கூறிமறைந்தார். விஷயத்தை பாண்டிய மன்னனிடம் கூறி, மன்னன் ஏற்ப்பாட்டில் சோழதேசம் நோக்கி செம்பியர்கோனின் குலதெய்வம் காண, தம் மகளுடன் திருவரங்கம் சென்றார். தம் மகளை கைப்படித்து அழைத்து வந்த பெரியாழ்வாரை அனைவரும் வியப்புடன் கண்டு வழிவிட, நேரே கருவறை உள்ளே சென்ற ஆண்டாள், அரங்கனுடன் கருவறையில் கலந்தார். அதன்பின் மூவரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். இது ஆண்டாளை பற்றி திவ்யசூரிசரிதம் கூறும் சுருக்க கதை, இதனையே ஆண்டாளின் பாடலும் எடுத்துறைக்கிறது. ஆண்டாளின் கதாபாத்திரத்தை கற்பனையென்றும், அவரது கற்பனையில் உருவான கற்பனைச்செல்வியே ஆண்டாள் என்றும், ஆண்டாள் இயற்றியதாய் கூறும் பாடல்கள் பெரியாழ்வார் இயற்றியதே என கூறுவோரும் உள்ளனர். காதலின் வேகத்தை கூறும் பெரியாழ்வாரின் திருமொழிப்பகுதியே பின்னாளில் நாச்சியார்திருமொழி ஆனது, கோதைநாச்சியார் என அவரை உண்மையான பெண்ணாகவே ஆக்கிவிட்டதாகவும் கருத்துரை உண்டு.


ஆனால் ஆண்டாளின் பாசுரங்களை ஆராய்ந்தால், பெண்ணால் மட்டுமே உணரமுடியும் சில விஷயங்களை காட்சிபடுத்தியிருப்பது புரியும்.பெரியாழ்வாரின் திருமொழி பாவனைக்கும், ஆண்டாளின் பாவனைக்கும் வித்தியாசத்தை நன்கு உணரமுடியும்.


ஆண்டாளின் பாசுரங்கள்:


திருப்பாவையை சற்று ஆழ்ந்து உணர்ந்தால் அதில் மார்கழிமாதத்தின் நீரோட்டத்தையும், மழையின் தேவையையும், பாவை நோன்பும் குறிப்பிடத்தக்கது.தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு குறித்து உள்ளது.பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியதாகும். இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பு தைந்நீராடலாய் குறிப்பிடப்படுகிறது.


நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.


"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்"


மார்கழிமாத நீராடலின் சிறப்பினை மேற்கண்ட பாடலில் ஆண்டாள் உணர்த்துகிறார்.


அற்புதமான விஞ்ஞான குறிப்பொன்றை போகிறபோக்கில் ஆண்டாள் பாடிவிட்டு போகிறார்.


"ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்"


மழை தேவனே, நீ எப்படி மழை பெய்யவேண்டும் என்பதை ஆய்ச்சியர்களான நாங்கள் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரைகளிலிருந்து கால் நனைப்பதுபோல் அல்லாமல் ஆழமாகச் செல். முங்கி வேண்டுமட்டும் நீரைக் குடித்து, கறுத்த உடலாக மாறு. எப்படிப் பட்ட கறுப்பு தெரியுமா... ஊழிக்காலம் முதல் இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல் மாறு.


இன்றைய மழைபொழியும் அறிவியல் சொன்னதை எளிதாய் தம் பாக்களில் ஆண்டாள் கூறுகிறார்.


"வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்த அவி,

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில்"


வேதம் ஓதுபவர்களால் வானுலகத்தில் வாழும் வானவர்க்கு என்று செய்த வேள்வியில் போடப்பட்ட பொருட்களை காட்டில்திரியும் நரி வந்து முகர்ந்து பார்ப்பது எவ்வளவு தகாத ஒன்றோ, அதைப் போல சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் பிறிதொரு மானிடனுக்கு இல்லை என்று ஆவேசமாய் கூறி உலகளந்த உத்தமனுக்கே என் உடம்பு அவனுக்கென்றே ஆனவை விம்மி எழுந்த என் பருத்த முலைகள்என் உடல் சாதாரண மனிதனுக்கென்று பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் மன்மதனே என்று பாடுகிறார் ஆண்டாள். தம் அழகு ஓர் சுமையாய் உள்ளது என பாடிய பல பெண்மணிகளை முன்பே இலக்கியங்களை கண்டுள்ளோம். உதாரணமாய் காரைக்கால்அம்மை, அவ்வையார் முதலியோரை கூறலாம், அத்தைகைய ஒரு பெண்மணியே ஆண்டாள், ஆனால் இப்பாடலின் சாராம்சம் புரியாமல் அதனை சர்ச்சைக்குரியாதாக்குவது விந்தையானது.


"வாரணமாயிரம் சூழவலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்"


இப்பாடல் திருமணமாகாத பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாளின் திருப்பாவையில் "வாரணமாயிரம்' என்று தொடங்கும் பத்து பாசுரங்களை பக்தியுடன் படித்தால் நல்ல கணவனும் நற்குணம் கொண்ட குழந்தைகளும் பெறும் பாக்கியம் கிடைக்கும்' என்று நம்பிக்கையுடன் பாடி வருகின்றனர்.




ஆண்டாள்-06

 ஆண்டாள்-06


மார்கழி மாதம் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படிப்பதும் நம் மண்ணில் தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு தொன்மையான நிகழ்வு. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் முப்பது பாக்கள் இருக்கின்றன. இறைவனோடு உயிர்கலந்து தான் மணந்து கொள்வதையே ஆண்டாள் கற்பனையாய் உணர்ச்சிமிகுதியாய் பாடிப்பார். கடவுள் நெறியில் ஈடுபடுவோர்க்கு காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது என்பது சிலர் கூற்று, ஆனால் இதை பொய்ப்பிக்கிறது ஆழ்வார்களின் கூற்று, ஆண்டாளுடைய பெருமை அளவுகடந்தது, இறைவனுக்கு பணிபூண்ட ஆழ்வார்கள் பன்னிருவரில் பெண்பாலினத்தை சேர்ந்தவர் ஆண்டாள் ஒருவரே. அதுமட்டுமின்றி இறைவனின் தேவியருள் ஒருவராய் வைத்து போற்த்தக்கவர்.ஆழ்வாராய் இருந்து பாமாலை சூட்டியும், தேவியாய் இருந்து பூமாலை சூட்டிய அனுபவமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவள் ஆண்டாள் மட்டுமே! ஆகவே பூர்வாச்சாரியார்கள் இருடிகளும், ஆழ்வார்களும் எத்தனை வாசியோ, அத்தனை வாசி ஆழ்வார்களும் ஆண்டாளுக்கே என்று போற்றினர்.


"பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், ஆண்டாள் பிறந்த 

திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு 

உண்டோ மனமே உணர்ந்துபார், ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு."


மணவாளமாமுனிகள் இயற்றிய உபதேசரத்தினமாலை இதனை உணர்ந்து உணர்த்துகிறது.


 தென்பாண்டி நாட்டு பதினெண் திருப்பதிகளில் எட்டாவதாய் அமைந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார், எம்பெருமான் திருமாலுக்கு தினமும் பூஜிக்க நந்தவனம் ஒன்றை ஏற்ப்படுத்தியிருந்தார், ஒருநாள் அந்நந்தவனத்தில் அழகிய பச்சிளம் பெண்மகவு ஒன்றை கண்டார். கி.பி 715 ல் ஆண்டாள் தோன்றியதாய் மு.ராகவையங்கார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆதாரங்கள் நிறைந்த கூற்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால் குருபரம்பரையில் இவர்தோன்றிய மாதமும், நட்சத்திரமும் அன்றி வேறு குறிப்புகள் இல்லை. இவரது இயற்பெயர் "சுரும்பார் குழற்கோதை" என்பதாகும். தான் சூடிக்களைந்த மலரை இறைவனுக்கு சூடியதால் "சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்" எனும் பெயரும் "சூடிக்கொடுத்த நாச்சியார் ","சூடிக்கொடுத்த பொற்கிளி" எனும் பெயரும் இவருக்கு உண்டு. ஆண்டாள் எனும் பெயர் இவருக்கு எதன்பொருட்டு வந்தது என்ற காரணம் அறியவில்லை. இறைவனின் தேவியாய் விளங்கியதால் "ஆண்டாள்" எனும் பெயர் ஒருங்கால் ஏற்ப்பட்டிருக்கக்கூடும்.


தன்மகளின் குழந்தைப்பருவத்தின் அழகை பெரியாழ்வாரின் திருமொழியில் அழகுபட வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.


"ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 

      பேச்சும் அலந்தலையாய்ச் 

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 

      உடுக்கவும் வல்லள் அல்லள் 

கையினில் சிறுதூதை யோடு இவள் 

      முற்றில் பிரிந்தும் இலள் 

பை அரவணைப் பள்ளியானொடு 

      கைவைத்து இவள்வருமே"


கோதை சின்னஞ்சிறுமியாய் சிற்றாடை கட்டி, மழலை மாறாமல் கேளிக்கைவிளையாட்டுகளில் ஈடுபட்டதையும், பதுமை வைத்து, மண்சோறுசமைத்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளித்தமை, சிற்றில்லம் கட்டி விளையாடுகையில் அரங்கனுக்கும் தனிஅறை அமைத்து விளையாடியது,அந்த அறையில் அரங்கன் அமர்ந்தது, அவருடைய வில், சங்கு, போன்ற ஆயுதங்களை ஆண்டாள் வரைந்தது போன்றவற்றை வியந்து பெரியாழ்வார் போற்றுகிறார்.

இதனை


பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 

      முற்றத்து இழைக்கலுறில் 

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 

      அல்லது இழைக்கலுறாள் 

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 

      கோவிந்தனோடு இவளைச் 

சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 

      தட்டுளுப்பு ஆகின்றதே    


என்கிறார்.


பெதுமை பருவத்தில் ஆண்டாள்:


குழந்தையாய் இருந்த பேதைப்பருவம் ஒருநாள் பெதுமை பருவம் எய்தி குமரியாகிறார்(இனிமேல் இவரை அவர் என அழைப்போம்) ஆண்டாள், தந்தையுடனே வனத்தில் தங்கி, செடிகளுக்கு நீரூற்றி,  பூக்களை பறிக்கும் வேலையில் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்கிறார்,நாட்கள் செல்ல செல்ல மெல்ல கண்ணனின் உருவம் தன்மனக்கேதத்தில் உருவாவதை மெல்ல ஆண்டாள் உணர ஆரம்பிக்கிறார். கண்ணன் தனக்கானவன் என்று உரிமையுடன் உணர்கிறார்.எனவேதான் தன்தந்தை தினமும் நாதனுக்கு சூட்டும் மாலையை, தான் சூடி அதன்பின் தன் நாயகனுக்கு கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றி, அதனை ஒருநாள் நிறைவேற்றவும் செய்தார், பின் அதுவே வழமை ஆயிற்று! இச்செயல்களை பெரியாழ்வார் அறிந்திருக்கவில்லை, கோவிலில் அர்ச்சகர் இவ்விடயத்தை அறிவார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை புதிய தெய்வீக மணமாகவும், வாடாமலும் இருப்பதைகண்டு இது பெரியாழ்வாரின் அற்புதம் போலும் என இடர்தெரிவிக்காமல் இருந்தார். இதற்கு முடிவும் ஒருநாள் வந்தது. தன்தந்தை வந்ததை மறந்து மாலைசூடி தன் நாதனையே நினைத்து மெய்மறந்தார். இந்நிகழ்வை கண்டு கடுஞ்சினங்கொண்டார் பெரியாழ்வார். இறைவனின் பெருமைகளை எடுத்து கூறி, இனியும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என சினம்தனிந்தபின் கூறினார். கோதைக்கும் அதுவே சரியெனபட்டது. ஆழ்வார் தம் மகள் சூடிய மாலையை நாதனுக்கு சூட்ட விரும்பாது, புதியமாலையை கோர்த்து சூட்டினார். ஆனால் மாலையில் ஏதோ குறை இருப்பதை உணர்ந்தார். இதே எண்ணத்தோடு நீண்டநேரம் தம்மகள் செய்த காரியத்தை நினைத்தவாறே வருத்தம் கொண்டார். சிறிது நேரம் தன்னை மறந்து கண்ணயர்ந்தார். அச்சமம் திருமால் கனவில் தோன்றி, "என்ன ஆழ்வாரே இன்று மணமேயில்லாத இல்லாத மாலையை சூட்டி விட்டீரே, என வினவ பதில் அளிக்க தெரியாமல் திகைக்கிறார் ஆழ்வார், "இனி ஆண்டாள் சூடிய மாலையே வேண்டும் "என கூறி மறைகிறார்.அவ்வாறே மறுநாள் செய்தார், தம்மகள் திருமாலின் தேவிதான் என்ற எண்ணம் தோன்றியது ஆழ்வாருக்கு.தம் மகளின் தெய்வீகத்தன்மையை எண்ணி உவகை கொண்டு, ஆனந்த கூத்தாடினார்.ஊரெல்லாம் இச்செய்தி பரவி, கோதையாள் "சூடிக்கொடுத்த சுடர்கொடி" ஆனார். அன்றுமுதல் பெரியாழ்வார் "தொடைசூடி கொடுத்தாளைத் தொழுமப்பன்" எனப்பட்டார். நாள்தோரும் தம்கனவில் தம் மனக்கேதத்தை ஒருநாள் ஆண்டாள் தகப்பனிடம் கூறினார்.


ஆண்டாளின் ஆசையை கேட்டு பெரியாழ்வாரின் நிலையையும், அவர் பாடிய பாசுரங்களையும், ஆண்டாள் திருப்பாவையையும் நாளை காண்போம்.   







பெரியாழ்வார் 05

 பெரியாழ்வார்-05


ஸ்ரீவில்லிப்புத்தூர் வரலாறு:


"பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று

ஈண்டிய சங்கம் எடுத்தூத வேண்டிய

வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று"


எழில்மிக்க முத்துக்களின் பிறப்பிடமாய் விளங்கியது பாண்டியநாடு, அந்நாட்டில் ஆங்காங்கே பொய்கைகளும், ஊருணிகளும் நிறைந்து வளமை செய்தது. இப்பழம்பதியில் புத்தூர் என்ற ஊர் ஒன்று உண்டு, கடும்வனமான அப்பகுதியில் பல வேடர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்குல தலைவனுக்கு, தலைவியாயே மல்லி என்பவள் வாழ்ந்துவந்தாள்.வில்லி என்றும் கண்டன் எனும் மாந்தர்களை ஈன்று சீறும் சிறப்பாய் வாழ்ந்து வந்தாள் மல்லி. அவ்விரு குழந்தைகளும், காளையர் பருவம் எய்தியவுடன், தம் தந்தையர் விருப்பத்திற்கேற்றவாரு வேடர் குல தலைவர்கள் ஆயினர். சகோதரர்கள் இருவரும் தம்குல வமைப்படி வேட்டைக்கு சென்று பல விலங்கினங்களை கொன்று குவித்தனர். அதில் லாவகமாய் ஒருபுலி தப்பித்து ஓட, அதனைபின் சென்று துரத்தியவாறே கண்டன் ஓடினான், மறைந்து நின்ற புலி கண்டனை அடித்து கொன்றது. தம் சகோதரனை நீண்டநேரம் காணாததால், வில்லி காட்டிற்குள் சென்றுதேட அங்கு இறந்துகிடந்தான் கண்டன். அந்த கோரகாட்சியை கண்டு அழுது மூர்ச்சயடைந்தான் வில்லி, அப்போது கனவில் தோன்றி காட்சியளித்து அருளினார் திருமால், அருகேயுள்ள புத்தூரில் தமக்கு மிகப்பெரிய கோவிலெழுப்பி அங்கு தம்மை குடியேற்ற ஆணையிட்டார். மேலும் அருகேயுள்ள குகையில் உம்சகோதரனை கொன்ற புலியின் குகை உள்ளது. அங்கே நிறைய செல்வங்கள் உள்ளது. உம் சகோதரனும் உயிர்த்தெழுவான் என அருளினார். இறைவன் கூறிய அனைத்தும் நடந்தது. வில்லியும் திருமால் கனவில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றினான், மிகப்பெரிய கோவிலெழுப்பி புத்தூர் என்ற பெயருடன் தம் பெயரையும் இனைத்து "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என புதுநாமம்  சூட்டினான்.


பெரியாழ்வார் தோற்றம்:


ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மறையவர் குலத்தில் வேயர்கள் எனும் ஒருபிரிவு இருந்தது. அதில் முகுந்தபட்டர் எனும் முன்குடுமி பிராமணர் இருந்தார்,பதுமவல்லி எனும் பெண்ணை மணந்து, அவர்கள் வாழ்ந்த நல்வாழ்க்கைக்கு அருந்தவப்புதல்வன் ஒருவன் பிறந்தான். இன்றுவரை நாம் அவரை பேசுபொருளாய் கொண்டுள்ள ஞானகுழந்தை அது. அவருக்கு பெற்றோர் இட்டபெயர் "விஷ்ணுச்சித்தர்"

ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர்.  இவர் திருமாலின் கருடவாகன அம்சமாய் கருதுவர். திருமாலுக்கு செய்யும் தொண்டுகளில் ஏது சிறந்ததென சிந்தித்து "பூவையே பூவண்ணணுக்கு பூமாலை கட்டி சமர்ப்பிப்பதே சிறந்த கைங்கரியம்" என முடிவெடுத்து மிகப்பெரிய அளவில் நந்தவனம் அமைத்து, அதில் விளைந்த பூக்களை மாலையாய் கோர்த்து தினமும் திருமாலுக்கு சாற்றி வருவதையே வழமையாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.


மன்னர் வருகை:


பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஸ்ரீவல்லபன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சி செய்தான். நகர்வலம் இரவில் வருகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வீதியின் திண்ணையில் ஒரு அந்தணன் உறங்கியிருக்க, அவரையெழுப்பி மன்னன் விசாரித்தார். தான் திவ்யதேச யாத்திரை செல்வதாய் அவன் பதிலுரை அளித்தான். தனக்கு ஒரு நீதி ஒன்றை சொல்லுமாறு வேண்ட,


"மழைக்காலத்தில் வேண்டியதை மற்றை எட்டு மாதங்களிலும்,இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இரவிலும், மறுமைக்கூ வேண்டியதை இம்மையிலும்" தேடுக எனும் பொருள்பொதிந்த ஸ்லோகம் சொல்லி முடித்தான்.மன்னனுக்கு இச்சொல் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. அரண்மனைக்கு சென்ற மன்னனுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை, மறுநாள் புரோகிதரான செல்வநம்பியை அழைத்து, மறுமையில் இன்பம் பெற வழி என்ன? என கேட்க, அவருக்கும் விடைதெரியாமல், நாடெங்கிலும் உள்ள சமயபெரியோர்களை அழைத்து விவாதம் நடத்த யோசனை கூற, அக்கூட்டத்தில் விஷ்ணுசித்தனும் கலந்து கொண்டு "மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்நெறி" என்று நிறுவ, மண்டபத்திலுள்ள பொற்கிழி தானே கீழேவிழ, அதை ஏந்திக்கொண்டார் விஷ்ணுசாத்தர். அவ்விக்கம் மன்னனுக்கு திருப்தியளிக்க, "பட்டர்பிரான்" என்று பட்டமளித்து அவையில் அவரை பெருமைபடுத்தினார்.மேலும் அவரை யானைமேல் அமர்த்தி நகர்வலம் வரச்செய்தார், அச்சமயம் கருடன்மேல் அமர்ந்து திருமால் வாணில் காட்சியளித்தார். இறைவனையே நேரில் கண்டதால் விஷ்ணுசித்தர், பெரியாழ்வார் ஆனார்.


பெரியாழ்வார் காலம்:


இவ்வாழ்வார் காலத்தில் புறச்சமயமமான சமண, பௌத்தம் ஆகியவற்றை பற்றி இவ்வாழ்வார் பாடவில்லை, இவர்நடத்திய சமயவாதம் சைவமதத்தினுடேதான். ஸ்ரீவல்லபதேவன் எனும் பாண்டிய மன்னரை குருபரம்பரை கூறுகிறது. ஆனால் பெரியாழ்வார் தம் பாசுரத்தில்

"கோ நெடுமாறன்" என்ற பாண்டியரை பாடுகிறார். சம்பந்தரின் சமகாலமான "நின்றசீர் நெடுமாறன்" சைவமதத்தை சேர்ந்தவர்.ஆனால் இவரது மகனான பராந்நக நெடுஞ்சடையன் பரம வைஷ்ணவர் எனவே இவரது காலமே பெரியாழ்வர் காலம், அதாவது எட்டாம் நூற்றாண்டு என்பது மு.இராகவைய்யங்காரின் கருத்து, இக்கருத்தை பொதுவாய் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


பெரியாழ்வார் பாசுரங்கள்:


பெரியாழ்வார் அருளிச்செய்த இரு பிரபந்தங்களுள் முதலாவது "திருப்பலாண்டு" என்பதே. இதில் பன்னிரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் "பல்லாண்டு பல்லாண்டு" என்று ஆரம்பிக்கும். பல்லாண்டு பாடுதலை மங்களாசாசனம் என்கிறது வைணவமரபு.


கண்ணனை குழந்தையாய் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாணியில் பெரியாழ்வார் நிறைய பாசுரம் பாடியுள்ளார். இன்றும் நம் வீடுகளில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த, காக்கையை விளையாட்டிற்கு அழைப்பர், 


"காக்கையே கண்ணுக்கு மை கொண்டுவா"

"காக்கையே முடிவார சீப்பு கொண்டுவா" என பெரியோர்கள் விளையாட்டாய் பாடுவர், இதனையே 1200 வருடம் முன்பு பெரியாழ்வாரும் பாடியுள்ளார்,


"திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த 

வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் 

அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம் 

கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். 

கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்"


"வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி 

தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு 

பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு 

காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா 

கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா"


"கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் 

எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் 

சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் 

அங்கமுடையதோர்கோல்கொண்டுவா 

அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா"


"கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் 

பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் 

நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி 

சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா 

தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா


இன்றைய நம் வீடுகளில் குழந்தைக்கு சோறூட்ட அழைக்கும் காக்கையை கண்ணனுக்காய் அன்றே அழைத்துள்ளார் பெரியாழ்வார்.


அன்றைக்கு புழக்கத்தில் இருந்த உணவுபழக்கத்தையும் தன் பாடலில் காட்சிப்படுத்துகிறார்,

"கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி 

பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் 

இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் 

அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே"


கும்மாயம் என்பது  அவித்தபயிருடன் நாட்டுச்சக்கரை கலந்து உண்ணும் உணவினை, பெரும்பாணாற்றுப்படை "கும்மாயம்" என்கிறது. மணிமேகலை இதனை "பயிற்றுத்தன்மை கெடாது கும்மாயமியற்றி" என்கிறது. இந்த கும்மாயஉணவு நிறைய கல்வெட்டுகளில் பயின்று வருகிறது!


சொத்தை சேர்த்துவைத்து, கடைசிகாலத்தில் அது மறந்துபோய், சுற்றத்தார் வினவ, பதிலும் சொல்ல இயலாது நிலைவருமுன், நெஞ்சினிலே நாதனுக்கு கோவிலெழுப்பி அதில் பூவிடுங்கள் என்கிறார் இவ்வாழ்வார்

"சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் 

சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து 

ஆர்வினவிலும்வாய்திறவாதே 

அந்தகாலம்அடைவதன்முன்னம் 

மார்வமென்பதோர்கோயிலமைத்து 

மாதவனென்னும்தெய்வத்தைநட்டி 

ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு 

அரவதண்டத்தில்உய்யலுமா"






திருமழிசை ஆழ்வார்-04

 திருமழிசை ஆழ்வார்-04


தொண்டை நாட்டு திருத்தலமான "திருமழிசை" எனும் ஊரில் தோன்றியவர் இவர். திருமாலினை நாள்தோறும் தவராமல் துதித்து வந்த பார்க்கவமுனிவருக்கும் அவரது மனைவிக்கும் மகனாய் பிறந்தவர் இவர், அதன்பின் தன் தந்தையாலேயே கைவிடப்பட்டு திருவாளர் என்பவரால் குழந்தைபருவத்தில் கண்டறியப்பட்டு வளர்க்கப்பட்டவர் இவர். இந்த திருவாளரது மகன் கணிகண்ணர் என்பவராவார். திருமழிசையாழ்வாரின் தொண்டராகவே அவருடன் பயணித்தார் கணிகண்ணர்.

216 பாசுரங்களை பாடியவர். அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன. இவரை குறித்து சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது,


 முதலாழ்வார்கள் பாடிய தலங்களை தரிசித்துவிட்டு, திருக்குடந்தைக்கு செல்ல திட்டமிட்டிருக்கையில், திருவெஃவில் சில நாட்கள் தங்கியிருந்தார் அச்சமயம் இவருக்கு தொண்டாற்றிய கிழவி ஒருத்தியை குமரியாக்கினிர், ஊரே இந்த விஷயத்தை பரபரப்பாய் பேசியது. இவ்விடயம் கேள்விப்பட்ட அந்நகரத்து மன்னன், தனது வயோதிகத்தையும் போக்க, ஆழ்வாரை அழைத்துவர திருமழிசையான் தொண்டரான கணிகண்ணருக்கு ஆணையிட்டான், ஆனால் இதற்கு திருமழிசையார் இசையவில்லை, உடனே கடுஞ்சினம் கொண்ட மன்னன், இருவரையும் இந்நகரை விட்டு வெளியேற ஆணையிட்டான். ஆழ்வாரோ இந்நகரில் உள்ள பெருமாளையும், கணிகண்ணரையும் தன்னோடு அழைத்து நகரை விட்டு கிளம்பினார். பெருமாளே போனபின், அந்நகரில் வாசம் கொண்டிருந்த இன்னபிற தேவதைகளும், திருமகளும் கிளம்ப, நகரே வெறிச்சோடியது, தன்தவறை உணர்ந்து ஆழ்வாரிடம் சரணாகதி அடைய திருமழிசையாரும் மீண்டும் வந்து திருமாலை அந்நகரில் குடிபெயர்த்தினார்.அதன்பின் குடந்தையிலேயே நிரந்தரமாய் தங்கி, பதிகங்களை பாடி அங்கேயே பரமபதம் அடைந்தார்.


திருமழிசையாரின் காலநிலை:


திருமழிசையார் கதையில் வரும் அந்த மன்னரின் பெயர்  குறித்து குறிப்பில்லை. கி.மு விலிருந்தே காஞ்சி நகருக்கு குறிப்பில்லை, சங்ககாலத்தில் பல்லவரை பற்றி குறிப்பில்லை எனினும், லோகவிபாகம் எனும் திகம்பர சமணநூலில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சிம்மவிஷ்ணு குறித்த குறிப்புள்ளது. சிலர் முதலாழ்வார்களின் சமகாலத்தில் தோன்றியவரே திருமழிசையாழ்வார் எனும் கருத்தினை வைப்பர். முதலாழ்வார்கள் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்ததாய் கதை ஒன்று உண்டு.ஆனால் இவரது பாசுரம் ஒன்றில்,


"அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்

சிறியார் சிவப்பட்டார் செப்பில்  வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே யாதலால் இன்று"


இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம்

முதலாழ்வார்கள் காலத்தில் சிறிதும் காணமுடியாது. மேலும்,


"நாராயணன் என்னை யாளி நரகத்துச்

சேராமல் காக்கும் திருமால்தன் பேரான

பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு

ஆசைப்பட்டாழ்வார் பலர்"


என்றும் பாடுகிறார்.


காப்பு மறந்தறியேன்  கண்ணனே என்று இருப்பன்

ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

கொடுத்து அளித்த கோனே குணப்பரனேஉன்னை 

விடத்துணியார்மெய்தெளிந்தார் தாம்.


என்ற இந்தபாடலில் பயின்றுவரும் "கோன் குணபரனே" யார் என ஆய்ந்தால் அது முதலாம் மகேந்திரவர்மனை குறிக்கும் சொல்லாகும், இவரின் பல சிறப்புபெயர்களில் குணபரன் என்பதும் ஒன்று. எனவே திருமழிசையாரின் காலம் 7 ம் நூற்றாண்டின் முற்பகுதி என கூறலாம்.


திருமழிசையாரின் பதிகங்கள்:


வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி 

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் 


என்ற பாடலின்மூலம்,

வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம். வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும் நாராயணன் தான்  என வழிகாட்டுகின்றார். 


கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்

உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்


கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் திருவரங்கம் என்கிறார், மேலும் இலங்கைவேந்தன் இராவணனையும் ஸ்ரீரங்கத்துடன் தொடர்புபடுத்தி கீழ்க்கண்ட பாடலில் பாடினார்.


"சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்,

சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்,

பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்,

அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே"


திருக்குறள் காலகாலமாய் நம் மண்ணில் நிலை கொண்டது என்பதற்கு திருமழிசையாரின் பதிகமும் ஓர் சான்று, திருவள்ளுவரின் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள குறளான, 


"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்"


என்ற குறளை திருமழிசையார் நேரடியாய் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...